கடும் நிதி நெருக்கடி..... விற்பனைக்கு வருகிறது பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம்
பாகிஸ்தானின் அரசுக்குச் சொந்தமான விமான சேவை நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA), கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நட்டத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம், 2023-ம் ஆண்டு நவம்பரில் பெரும் சர்ச்சையில் சிக்கியது.
அந்த நேரத்தில், 7 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இது, பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தின் பொருளாதார திறனை கேள்விக்குள்ளாக்கியது.
பணவீக்கம், ஆளுமை குறைபாடு, தவறான மேலாண்மை உள்ளிட்ட காரணங்களால், PIA நிறுவனத்தின் மதிப்பு மற்றும் செயல்திறன் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்த நிலையில், கடந்த ஆண்டு இது தனியார்மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி வெற்றியடையவில்லை.
தற்போது, இந்த நிறுவனத்தை விற்கும் முயற்சியை பாகிஸ்தான் அரசு மீண்டும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் தனியார்மயமாக்கல் ஆணையம் தெரிவித்த தகவலின்படி, PIA நிறுவனத்தைக் கொள்முதல் செய்வதற்காக உள்ளூர் நிறுவனங்களைச் சேர்ந்த நான்கு குழுக்கள் ஏலத்தில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.
எதிர்வரும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதக் காலத்துக்குள், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸுக்கான இறுதி ஏலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச விமானப் பிஸினஸில் இருந்த முக்கியத்துவத்தை இழந்துவிட்ட நிலையில், PIA நிறுவனத்தின் எதிர்காலம் என்னவாகும் என்பதற்கான தீர்வு, இந்த ஏலத்தின் முடிவில் தான் வெளியாகும் என நிபுணர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
No comments