கள்ளக்காதலியை சேர்த்து வைக்காத பெண்ணை அரிவாளால் வெட்டிய கள்ளக்காதலன்
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன் (42). இவர் திருப்பூரில் தங்கி எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவர் பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு எலெக்ட்ரிக்கல் தொடர்பாக வேலை செய்ய வந்தார். அப்போது அவருக்கும், அந்த வீட்டில் உள்ள திருமணமான பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதையடுத்து அந்த பெண் கணவரை விட்டு பிரிந்து கள்ளக்காதலன் முருகனுடன் சேர்ந்து திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் தனியாக வீடு எடுத்து குடியிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த பெண்ணுக்கும், கள்ளக்காதலன் முருகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் முருகன் தனது கள்ளக்காதலியின் உறவினர் முறை பெண்ணான ராம்லட்சுமியிடம் (வயது 48) சென்று கள்ளக்காதலியை சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் ராம்லட்சுமி மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராம்லட்சுமியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ராம்லட்சுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பெண்ணை அரிவாளால் வெட்டிய முருகனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments