டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றது ஏன்.? சுவாரஸ்ய விளக்கம் அளித்த விராட் கோலி
இந்திய கிரிக்கெட்டின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011இல் அறிமுகமான அவர் 2025 வரை 123 போட்டிகளில் 9230 ரன்களை அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அவருடைய தலைமையில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது இந்தியா. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான இந்திய கேப்டன் என அழைக்கப்பட்டார்.
36 வயதிலும் சிறப்பான பிட்னஸ் கொண்டிருந்த அவர், இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் திடீரென ஓய்வு பெற்றது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை அடிக்கும் பொன்னான வாய்ப்பை விராட் கோலி வெறும் 770 ரன்கள் வித்தியாசத்தில் தவற விட்டது அவருடைய ரசிகர்களை சோகமடைய வைத்தது.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்மால் முடிந்த அனைத்தையும் இந்தியாவுக்காக கொடுத்து விட்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இனிமேலும் சாதிக்கவோ நிரூபிக்கவோ எதுவுமில்லை என்று உணர்ந்ததாலேயே ஓய்வு பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
என்னுடைய தாடியை 2 நாட்களுக்கு முன்பாகத்தான் வர்ணம் செய்தேன். உங்களுடைய தாடியை ஒவ்வொரு 4 நாட்களுக்கு ஒரு முறை வர்ணம் பூசினால் உங்கள் (விடை பெறும்) நேரம் வந்து விட்டது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த முடிவு எளிதானது கிடையாது என்றாலும் சரியானதாக உணர்கிறேன். என்னால் முடிந்த அனைத்தையும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கொடுத்து விட்டேன். அதுவும் நான் நம்பியதை விட எனக்கு அதிகமாகவே திரும்பிக் கொடுத்துள்ளது. அதனால் மிகுந்த நன்றியுணர்வுடன் இந்த விளையாட்டிலிருந்து வெளியேறினேன். இவ்வாறு அவர் கூறினார்.
No comments