• Breaking News

    ஓரணியில் தமிழ்நாடு..... தி.மு.க.வினர் மிரட்டுவதாக வழக்கு

     


    மதுரையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில், 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பை முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி கடந்த ஜூலை 3-ம் தேதி சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாக சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திமுக நிர்வாகிகள், வீடு வீடாகச் சென்று, மக்களைச் சந்தித்து கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையின்போது, பொதுமக்களிடம் ஆதார் விவரங்களை சேகரிக்க தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க., 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தி வருகிறது. இதற்காக தி.மு.க.வினர் வீடு வீடாக செல்கின்றனர். அப்போது அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு தொல்லை செய்கின்றனர். அனுமதி இல்லாமல் தமிழக முதல்-அமைச்சர் படத்துடன் கூடிய 'ஓரணியில் தமிழ்நாடு' என அச்சிடப்பட்ட சுவரொட்டியை வீட்டில் ஒட்டுகின்றனர்.

    பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் உள்பட அடையாள அட்டைகளை கேட்டனர். அதனை தர மறுத்தபோது, வீட்டுப்பெண்கள் மாதந்தோறும் அரசிடம் பெற்று வரும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை நிறுத்திவிடுவோம் என மிரட்டினர். அதோடு அனைவரின் தனிப்பட்ட செல்போன் எண்களை கேட்டு வாங்கி, தி.மு.க.வில் சேர்த்து வருகின்றனர்.

    தி.மு.க.வில் சேரவில்லை என்றால் அரசின் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும் எனவும் அச்சுறுத்துகின்றனர். அரசியல் பிரசாரத்துக்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறானது. இது, அரசியலமைப்பு வழங்கும் சுதந்திரம் மற்றும் தனி உரிமையை மீறுவதாகும்.

    பொதுமக்களிடம் தி.மு.க.வினர் சட்டவிரோதமாக ஆதார் விவரங்களை சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி, தி.மு.க. பொதுச்செயலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

    No comments