கோவை: விவசாய கிணற்றில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு
மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காட்டுப் பகுதியில் வசிக்கும் யானைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில்தான் குடிநீர் மற்றும் உணவு தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் வருகின்றன. அந்த வகையில் கோவை மாவட்டம் நல்லூர் வயல் சோகை என்ற பகுதிக்கு அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு யானைக் கூட்டங்கள் படையெடுத்தன. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் பின்னர் அப்பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் யானைகளைக் காட்டுப்பகுதிக்கு விரட்டியுள்ளனர். அப்போது வழி தவறிச் சென்ற 35 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று அதிகாலை 3 மணியளவில் அங்குள்ள 20 அடி ஆழ விவசாய கிணற்றில் விழுந்தது. அந்த கிணற்றில் அதிக அளவில் நீர் இருந்த நிலையில் நீரில் மூழ்கி யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து வனத்துறையினர் யானையின் உடலை பொக்லைன் மூலம் மீட்டனர். விவசாய கிணற்றில் காட்டு யானை தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments