போலீஸ் விசாரணைக்கு சென்று வந்தவர் தற்கொலை...... இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது வழக்கு..... - MAKKAL NERAM

Breaking

Tuesday, August 5, 2025

போலீஸ் விசாரணைக்கு சென்று வந்தவர் தற்கொலை...... இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது வழக்கு.....

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நைனா(வயது 65). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான இவருக்கும், அவரது தம்பி பன்னீர்செல்வம் மனைவி சரிதா(45) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை தாக்கி, மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக நைனா மீது திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் அவரது கொழுந்தியாள் சரிதா புகார் கொடுத்தார். அதன் பேரில் நேற்று முன்தினம் நைனாவை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் நேற்று அதிகாலை தனது நிலத்தில் உள்ள மோட்டார் கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நைனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே நைனா தற்கொலை செய்வதற்கு முன்பு 3 பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது:-

எனது பாட்டி எனக்கு கொடுத்த நிலத்தில் சரிதா பங்கு கேட்டார். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. எனவே என்னை பழிவாங்கும் நோக்கத்தில் தகாத சில நபர்களுடன் சேர்ந்து சரிதாவை நான் மானபங்கம் படுத்தியதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸ் துணையுடன் என்னை வீட்டை காலி செய்யுமாறு மிரட்டுகின்றனர்.

விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு சென்றால் அங்கு கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். இதற்கு போலீ்ஸ் இன்ஸ்பெக்டரும் உடந்தையாக இருக்கிறார். நான் சொல்வது எல்லாம் உண்மை. தவறாக வேறு ஒன்றும் கூறவில்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு நைனா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும், அதுவரையில் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே நைனாவின் மனைவி பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா, சரிதா, பெரும்பட்டு சந்திரன் மகன் பழனிவேல், வெ.அத்திப்பாக்கம் சிவலிங்கம் மகன் ஆறுமுகம், ராமசாமி மகன் கண்ணன், ஆறுமுகம் மகன் சுந்தரம், இன்னொரு ஆறுமுகம் மகன் சந்திரசேகர் ஆகிய 7 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மானபங்கம் செய்ததாக கொழுந்தியாள் கொடுத்த புகாரில் போலீஸ் விசாரணைக்காக சென்று வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் 3 பக்க கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment