திருப்பத்தூர் மாணவர் உயிரிழப்பு..... உடலை வாங்க பெற்றோர் சம்மதம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, August 5, 2025

திருப்பத்தூர் மாணவர் உயிரிழப்பு..... உடலை வாங்க பெற்றோர் சம்மதம்

 


திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன் முகிலன் (வயது 16). இவர் திருப்பத்தூரில் உள்ள தோமினிக் சாவியோ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில், விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி முகிலனை காணவில்லை. இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் மாணவன் முகிலன் பிணமாக மிதந்தான். மேலும் மாணவனின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம், எனவே பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முகிலனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், வேலூரில் இருந்து டாக்டர் பாலாஜி தலைமையிலான டாக்டர் குழுவினர் வரவழைக்கப்பட்டு மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை முகிலனின் உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் கூறினர். அதற்கு போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை வருவதற்கு 2 முதல் 3 நாட்கள் ஆகும். அறிக்கை வந்ததும் அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனாலும் மாணவனின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.

இந்தநிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசா ர்நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு உயிரிழந்த முகிலனின் உடலை வாங்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். திருப்பத்தூர் மாணவர் முகிலன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு 2வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளியை சுற்றி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment