தூத்துக்குடி அருகே கோவில் பூசாரி வெட்டிக்கொலை..... போலீசார் விசாரணை - MAKKAL NERAM

Breaking

Friday, August 8, 2025

தூத்துக்குடி அருகே கோவில் பூசாரி வெட்டிக்கொலை..... போலீசார் விசாரணை

 


தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள மங்களக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். டெய்லராக உள்ளார். இவரது மனைவி விஜயா. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏரல் ராஜபதி அருகே உள்ள சொக்கப்பழங்கரை என்ற கிராமத்தைச் சேர்ந்த பூசாரியான ரவி என்பவருடன் விஜயாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.


கோவிலுக்கு சென்ற இடத்தில் விஜயா, பூசாரி ரவியை சந்தித்துள்ளார். இந்த பழக்கம் குறித்து விஜயாவின் கணவர் முத்துராமலிங்கத்திற்கு தெரியவர, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணவரை பிரிந்த விஜயா, தனது குழந்தைகளுடன் 4 ஆண்டுகளாக பூசாரி ரவியுடன் வசித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, விஜயா மற்றும் பூசாரி ரவி ஆகியோர் பழைய வீட்டை காலி செய்து விட்டு, சண்முகபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளனர். அதன்பிறகு, ரவி வேறொரு கோவில் பூசாரி ஆனார்.


இந்த நிலையில், நேற்று இரவு பூசாரி ரவி வீடு திரும்பியபோது, சோட்டையன் தோப்பு சாலையில் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள பாஸ்ட் புட் கடையில் விஜயாவின் மகள்களுக்கு சிக்கன்-65 வாங்கியுள்ளார். அப்போது அங்கே பைக்கில் வந்த சிலரும், நடந்து சென்ற சிலரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பூசாரி ரவியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்து நகர் போலீசார், பூசாரி ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய கொலையாளிகளையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment