கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 13, 2025

கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி

 


மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மாநகராட்சி பில் கலெக்டர், வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி கமிஷனர் என 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.


மேலும் 5 மண்டல தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர்கள் என 7 பேர் ராஜினாமா செய்தனர். இந்த வரிமுறைகேடு தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. கோர்ட்டு உத்தரவின்படி ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது.


இந்த நிலையில் வரிவிதிப்புகுழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த மாநகராட்சி 51-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் விஜயலட்சுமி, அவரது கணவர் கண்ணன் மற்றும் 96-வது வார்டு ஒப்பந்த ஊழியர் செந்தில்பாண்டி ஆகியோர் கடந்த வாரம் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் முறைகேடு குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போலீசார் இறுதியில், கண்ணன் மற்றும் செந்தில்பாண்டியை கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட கண்ணனிடம் நடத்திய மேல்விசாரணை குறித்த அறிக்கையை போலீசார், கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில், மேயரின் கணவர், 3-வது மண்டல தலைவரின் கணவர், தி.மு.க., கவுன்சிலர்கள் 3 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. அதுதவிர 3-வது மண்டலத்தில் முன்பு பணியாற்றிய உதவி கமிஷனர் சுரேஷ்குமார் என்பவர் மீதும் வரிவிதிப்பு முறைகேடு புகார் எழுந்தது. அவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு, தூத்துக்குடி மாநகராட்சிக்கு மாற்றப்பட்டு உதவி கமிஷனராக பணி செய்து வந்தார்.எனவே தூத்துக்குடிக்கு சென்ற போலீசார், அவரை அழைத்து வந்து மதுரையில் தீவிர விசாரணை நடத்தினர். அவர் பணியில் இருந்த காலத்தில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து உதவி கமிஷனர் சுரேஷ்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதன் மூலம் இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.


இந்த விவகாரத்தில் மதுரை மாநகராட்சி மேயரான இந்திராணியின் கணவர் பொன்வசந்த்தை விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால், அவர் மதுரையில் இருந்து தலைமறைவானார். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் பெற சென்னையில் இருந்து முயற்சி செய்து வந்ததாக கூறப்பட்டது.அதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர். மேயர் கணவரான பொன்வசந்த்தை நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். அவரை மதுரைக்கு அழைத்து வந்து விசாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


இந்த நடவடிக்கையால் சில தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர். கைது செய்யப்பட்ட பொன்வசந்த் ஏற்கனவே முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆவார்.மதுரை மாநகராட்சியில் நடந்த முறைகேடு குறித்து தோண்டத்தோண்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இன்னும் பலர் சிக்கக்கூடும் என போலீசார் தெரிவித்தனர்.


இந்நிலையில் கைது செய்யப்பட்ட பொன்வசந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் கைது செய்து அழைத்து வரப்பட்டிருந்த பொன் வசந்துக்கு [ மதுரை மேயர் இந்திராணியின் கணவர்] மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.


அவருக்கு அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் இசிஜியில் மாறுதலாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment