சேலம் அருகே தந்தை-சித்தியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற கொடூர மகன்..... - MAKKAL NERAM

Breaking

Friday, August 22, 2025

சேலம் அருகே தந்தை-சித்தியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற கொடூர மகன்.....

 


சேலத்தை அடுத்த இளம்பிள்ளை அருகே கோனேரிப்பட்டி பூசாரிகாட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). கோவில் விழாக்களில் வெடி வெடிக்கும் வேலை செய்து வந்தார். இவர், முதல் மனைவியை பிரிந்து 2-வதாக ஜெயலட்சுமி என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். பழனிசாமியின் முதல் மனைவியின் மகன் ஆகாஷ் (22), ஜெயலட்சுமியின் 17 வயது மகள் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதில் ஆகாஷ் இறைச்சி வெட்டும் வேலைக்கு சென்று வந்தார்.


இதற்கிடையே பழனிசாமி, ஜெயலட்சுமி ஆகிய இருவரையும் கடந்த 16-ந் தேதி முதல் காணவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், ஆகாஷ், ஜெயலட்சுமியின் மகளிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் வெளியூர் சென்று இருக்கிறார்கள் என்று மழுப்பலாக கூறியுள்ளனர். அவரது பதிலில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இளம்பிள்ளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


போலீசார் முதலில் ஆகாசை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குபின் முரணாக பதில் அளித்த ஆகாஷ், பின்னர் தந்தை-சித்தியை வெட்டிக் கொன்றதை ஒப்புக்கொண்டார். மேலும் ஆகாஷ் கூறிய தகவல் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது.


அதாவது இரட்டைக் கொலை செய்தது மட்டும் அல்லாமல், கை, கால்கள், தலை என துண்டு துண்டாக இறைச்சியை வெட்டுவது போன்று அவர்களது உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி உள்ளார். அதனை 3 சாக்குப்பைகளில் மூட்டையாக கட்டி உள்ளார். பின்னர் இரவு நேரத்தில் ஆகாஷின் ஊரில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஏகாபுரம் ஏரியில் ஒரு மூட்டையை வீசி உள்ளார்.


மேலும் 2 மூட்டைகளை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தாழையூர் ஏரியில் வீசி உள்ளார். இதற்கு ஜெயலட்சுமியின் மகளும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த தகவலை கேட்டு போலீசாருக்கே தலைசுற்றியது.


உடனே கொலைக்கான காரணத்தை கண்டறிவதை விட, கொலையானவர்களின் உடல் பாகங்களை மீட்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கினர். 2 ஏரிகளையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து 2 ஏரிகளிலும் இறங்கி சாக்குமூட்டைகள் தேடும் பணி நடந்தது. சுமார் 5 மணி நேர தேடுதலுக்கு பிறகு அந்த சாக்குமூட்டைகள் மீட்கப்பட்டன. உடல் பாகங்கள் அழுகி துர்நாற்றம் வீசியது.


தொடர்ந்து ஆகாஷிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், ஜெயலட்சுமி மகளிடம் பழனிசாமி தகாத முறையில் நடக்க முயன்றதாகவும், அவரை கண்டித்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த ஆகாஷ் இறைச்சி வெட்டும் கத்தியை கொண்டு பழனிசாமியை வெட்டி உள்ளார். இதனை தடுக்க வந்த ஜெயலட்சுமிக்கும் வெட்டு விழுந்ததாக தெரிகிறது.


இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளனர். மேலும் இந்த கொலையை மறைப்பதற்கான முயற்சியை ஆகாசும், ஜெயலட்சுமியின் மகளும் மேற்கொண்டுள்ளனர். ஆத்திரத்தில் ஆகாஷ் கொலை செய்து இருந்தாலும், தந்தையின் உடல் பாகங்களை இவ்வளவு கொடூரமாக வெட்ட வேண்டிய காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஜெயலட்சுமியின் உடலை துண்டு துண்டாக வெட்டும் போது அவருடைய மகளும் உடன் இருந்துள்ளார்.


அந்த சிறுமியும் மனதை கல்லாக்கிக் கொண்டு எப்படி இந்த பாதக செயலில் ஈடுபட்டுள்ளாள் போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் போலீசாருக்கு எழுந்துள்ளன. ஆனால் வெவ்வேறு ஏரிகளில் உடல்கள் வீசப்பட்டு இருந்ததால் அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதே போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. ஆகாசை கைது செய்த போலீசார் அந்த சிறுமியையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கொலைக்கு வேறு ஏதும் காரணம் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment