• Breaking News

    நீலகிரி தெப்பக்காடு முகாமில் விநாயகரை வழிபட்ட யானைகள்


     நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு, அபயாரண்யம் முகாம்களில் 29 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுடன் ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களை வனத்துறையினர் கொண்டாடி வருகின்றனர். இதைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.


    இந்த நிலையில், முதுமலையில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் விநாயகர் சதுர்த்தி விழாவை இன்று கொண்டாடினர். இதற்காக, மாயாற்றில் வளர்ப்பு யானைகளை பாகன்கள் குளிப்பாட்டி அழைத்து வந்தனர். பின்னர், தெப்பக்காடு முகாமில் விபூதி, சந்தனம், குங்குமம் பூசி அலங்காரம் செய்தனர். தொடர்ந்து, அனைத்து யானைகளுக்கும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டன.


    இந்த சமயத்தில் முகாம் வளாகத்தில் நூற்றாண்டுகளை கடந்த விநாயகர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, வளர்ப்பு யானைகள் கிருஷ்ணா, பொம்மி அழைத்து வரப்பட்டு கோவில் முன்பு நிறுத்தப்பட்டன. பின்னர், மணியடித்தபடி வளர்ப்பு யானைகள் கோவிலை 3 முறை சுற்றி வந்து, குனிந்து துதிக்கையை உயர்த்தி விநாயகரை வணங்கின.


    இதைத் தொடர்ந்து, விநாயகருக்கு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யானைகளுக்கு கரும்பு, மாதுளை, வாழைப்பழம், தேங்காய், வெல்லம், ஆப்பிள், ஆரஞ்சு, கேழ்வரகு, கொள்ளு, அரிசி கட்டிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறப்பு உணவு வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வளர்ப்பு யானைகள் விநாயகரை வழிபட்டதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    No comments