தறுதலைக் காதல்..... போலீசில் புகார் அளித்த ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த மாணவர் - MAKKAL NERAM

Breaking

Thursday, August 21, 2025

தறுதலைக் காதல்..... போலீசில் புகார் அளித்த ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த மாணவர்

 


மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் உள்ளது கோட்வாலி போலீஸ் நிலையம். இதன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 26 வயது ஆசிரியை வேலை பார்த்து வருகிறார். முன்பு அந்த பள்ளியில் படித்து வந்த 18 வயது மாணவர் ஒருவர் தற்போது வேறு பள்ளிக்கு மாறிவிட்டார்.


அந்த மாணவருக்கு ஆசிரியை மீது இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த ஆசிரியையிடம் அவர் ஓராண்டுக்கும் மேலாக பிரியமுடன் பழகி வந்துள்ளார். ஆசிரியை பாசம் காட்டியதை அவர் தவறுதலாக புரிந்து கொண்டு ஒரு (தறு)தலையாக ஆசிரியையை காதலித்து வந்துள்ளார்.


வேறு பள்ளிக்கு மாறிய போதிலும் அந்த மாணவர் அவ்வப்போது ஆசிரியையை சந்தித்து பேசி உள்ளார். கடந்த சுதந்திர தினத்தன்று ஆசிரியையை சந்தித்த அந்த மாணவர், அவரது உடையையும், அழகையும் வர்ணித்து தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது. மாணவரின் ஆபாச பேச்சை விரும்பாத ஆசிரியை கோபம் அடைந்தார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.


இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர், ஆசிரியையை பழிவாங்க நினைத்துள்ளாா். சம்பவத்தன்று ஆசிரியையின் வீட்டுக்கு பெட்ரோல் பாட்டிலுடன் சென்றாா். திடீரென ஆசிரியை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


இதில் ஆசிரியையின் உடலில் தீப்பற்றி எரிந்தது. அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆசிரியையை மாவட்ட ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் ஆசிரியை சிகிச்சை பெறுவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.


ஆசிரியை மீது தீவைத்தது தொடர்பாக மாணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கல்யாண்பூர் கிராமத்தில் வைத்து மாணவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment