மதுரை: மீண்டும் 150 பவுன் நகை கேட்டு டார்ச்சர்..... வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
மதுரை செல்லூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கணவர், மாமனார் மற்றும் மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரூபன்ராஜ் - பிரியதர்ஷினி தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மணமகன் வீட்டார் வரதட்சணையாக 300 பவுன் நகை கேட்ட நிலையில், பெண் வீட்டார் 150 பவுன் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் 150 பவுன் போதாது; மேலும் 150 பவுன் தர வேண்டும் என்று கேட்டு மணமகன் வீட்டார் பிரியதர்ஷினியை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ரூபன்ராஜ் - பிரியதர்ஷினி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று பிரியதர்ஷினி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி உயிரிழந்தார்.
வரதட்சணை கொடுமையால் பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் அவரது கணவர் ரூபன் ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன் மற்றும் மாமியார் தனபாக்கியம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments