வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் பிரியங்கா காந்தி
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு தொகுதிக்கு கடந்தமாதம் (நவம்பர்) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அவர் 6,22,338 வாக்குகள் பெற்று 4 லட்சத்துக்கு அதிகான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
இந்நிலையில், கேரள மாநிலம், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினரான பிரியங்கா காந்தி, அந்த தொகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதன்படி வயநாட்டில் உள்ள நிலம்பூர் வனப்பகுதியில் வாழும் மக்களை நேரில் சந்தித்த மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.
அதன் ஒரு பகுதியாக, கொட்டியம்வயல் வனப் பகுதிக்குள் முன்மொழியப்பட்ட படிஞ்சரத்தாரா - பூழித்தோடு சாலை திட்டத்தை மாவட்ட கலெக்டர், மாவட்ட வன அலுவலருடன் இணைந்து பிரியங்கா காந்தி பார்வையிட்டார். தொடர்ந்து, நிலம்பூர் அருகேவுள்ள கருளை காடு வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
No comments