அடித்தவனை விட்டுவிட்டு,அடிவாங்கியவரை கைது செய்வதா..... காவல்துறையை வறுத்தெடுக்கும் வலைதள வாசிகள்......
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி தலைவராகவும், பாமக மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். மேலும் வன்னியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளராகவும் உள்ளார். ராமதாஸின் தீவிர ஆதரவாளர். கடந்த 5ம் தேதி ஆதரவாளர்களுடன் பேரூராட்சி அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு காரில் வந்த 8 பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தியது. மேலும், நாட்டு வெடி குண்டுகளையும் வீசியது. இதில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் ம.க.ஸ்டாலின் அங்கிருந்து எப்படியோ எஸ்கேப்பாகி உயிர் தப்பினார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ம.க.ஸ்டாலின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரத்தில் டிஜிபி நேரடியாக தலையிட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். ம.க. ஸ்டாலினுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவும், பாமக மாநில இணைப்பொதுச் செயலாளருமான அருள் தனது ஆதரவாளர்களுடன் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க திட்டமிட்டார்.இவர்கள் வருகைக்காக புரட்சி தமிழகம் கட்சி தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி, டிஜிபி அலுவலக வாசலில் காத்திருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர், ஏர்போர்ட் மூர்த்தியிடம் தகராறு செய்தது மட்டுமல்லாமல் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் சுதாரித்துக்கொண்டு தன்னை காத்துக்கொள்ள எதிர் தாக்குதல் நடத்தியதால் விசிகவினர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலானது. இந்த சம்பவத்திற்கு அன்புமணி, அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.இதனிடையே ஏர்போர்ட் மூர்த்தி தான் வைத்திருந்த பாக்கெட் கத்தியால் தாக்கியதில் விசிக சேர்ந்த திலீபன் என்பவர் காயமடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இருதரப்பினரும் மாறி மாறி மெரீனா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார்களை அடுத்து மெரினா போலீசார் இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்தனர். விசிக பிரமுகர் திலீபன் என்பவர் ஏர்போர்ட் மூர்த்தி ஆயுதங்கள் மூலம் தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் அவர் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஏர்போர்ட் மூர்த்தி மீது ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே சமூகவலைதள வாசிகள் அடித்தவனை விட்டுவிட்டு அடிவாங்கியவரை கைது செய்வதா என தமிழக அரசுக்கும்,காவல்துறைக்கும் எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
No comments