நீலம் கலந்த தண்ணீர் பாட்டில்களுக்கு அஞ்சும் தெருநாய்கள்.?
தமிழகத்தில் தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் தெருநாய் கடி, தொல்லையில் இருந்து தப்பிக்க பொதுமக்களும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 45 வார்டுகளிலும் தெருநாய்கள் அதிகரித்து வருகிறது. தெருக்களில் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை துரத்தி கடித்து வருவதோடு, இருசக்கர வாகனங்கள் செல்லும் போது சாலையில் குறுக்கிடுவதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. காலை நேரத்தில் நடைபயிற்சி செல்லும் முதியவர்கள் மற்றும் தெருக்களில் விளையாடும் குழந்தைகளும் அண்மைக் காலமாக தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.
இந்நிலையில், தெருநாய்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க குடியிருப்பு பகுதி மக்கள் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதன்படி, துணிகளுக்கு பயன்படுத்தப்படும் சொட்டு நீலத்தை நீரில் கலந்து பாட்டில்களில் நிரப்பி வீட்டின் முன்பு வரிசையாக அடுக்கி வைத்துள்ளனர். சொட்டு நீலம் கலந்த தண்ணீர் பாட்டில்களுக்கு தெருநாய்கள் அஞ்சும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். மேலும், இந்த முயற்சி பலன் அளிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை, சொட்டு நீல நிறத்தை பார்த்து நாய்கள் அஞ்சுவதற்கான எந்தவித அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என்று கால்நடை டாக்டர் தெரிவித்துள்ளார்.
No comments