செங்கல்பட்டு அருகே பாமக நிர்வாகி வெட்டி படுகொலை
செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பாமக மத்திய மாவட்ட துணைச் செயலாளர் ஏ. வாசு (வயது 45), மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பாமகவில் தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த ஏ. வாசு, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மனாகவும் பதவி வகித்துள்ளார். அதனுடன், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு கேட்டரிங் மற்றும் குடிநீர் வழங்கும் தொழில்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இன்றைய தினம் காலை தனது லாரியில் தண்ணீர் நிரப்ப இளந்தோப்புக்கு வந்த போது, மர்ம கும்பல் தாக்கி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்து தப்பியோடியவர்களை பிடிக்க விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
No comments