• Breaking News

    நாகை: கீழையூர் அருகே விவசாயிகளுக்கு மா கவாத்து தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது

      


    கீழையூர்  வட்டாரத்திற்கு உட்பட்ட திருப்பூண்டி கிழக்கு,விழுந்தமாவடி உள்ளிட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு மாமரத்தில் கவாத்து செய்தல் தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.


    நாகப்பட்டினம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் முகமது சாதிக்  பங்கேற்று விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.பழப்பயிர்களான மா ,கொய்யா, இலந்தை திராட்சை போன்ற பழப்பயிர்கள் வருடத்திற்கு இருமுறை அல்லது வருடம் தோறும் கவாத்து செய்வதினால் பூக்கள் பூப்பதற்கும் பழங்களின் திரட்சிக்கும் கவாத்து தொழில்நுட்பம் மிக இன்றியமையாத ஒன்றாகும். அப்பழப் பயிர்களை ஒப்பிடுகையில் மா மரத்தில் கவாத்தானது  மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கவாத்து செய்வதன் மூலம் பூக்களின் உற்பத்தி மற்றும் பழங்களின் தரம் மேம்படுகிறது.  அதுவும் மா மரத்தில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் கவாத்து செய்வது மிக முக்கியமான ஒன்றாகும்.

     ஏனென்றால் பழங்கள் அறுவடை செய்த பின் வேரிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் மரத்தின் கிளைகள் மற்றும் இலைகளுக்கு நேரடியாக சென்று சேருகிறது. இந்த மாதத்தில் கவாத்து செய்தவுடன் புதிதாக செல் உருவாக்கத்திற்கும் செல் பகுப்படைதல் போன்ற தாவர உடலியல் மாற்றங்கள் நடைபெறுவதால் புதிய கிளைகள் உருவாகுவதற்கு இது உதவுகிறது. பொதுவாக மாமரத்தில் தாழ்ந்து இருக்கும் கிளைகள், குறுக்கும், நெடுக்குமாக ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும் கிளைகள், நோய் தாக்கிய மற்றும் மெல்லிய, பட்ட அல்லது காய்ந்த கிளைகள் ஆகியவற்றை நீக்கவேண்டும். 


    இதன் மூலம்  சூரிய வெளிச்சம்  மற்றும் காற்று உள்ளே உள்ள கிளைகளுக்குக் கிடைத்து, மரம் நன்றாக வளர்ந்து பூ பூத்து காய்ப்பிடிக்க ஏதுவாகிறது. மா மரத்தில் நடவு செய்த மூன்று வருடங்கள் வரை பூ பூப்பதை தவிர்க்கவேண்டாம். வருடத்திற்கு ஒரு முறை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நெருக்கமாக உள்ள கிளைகளை மட்டுமே வெட்டிவிட்டு இதர கிளைகள் கவாத்து செய்யாமல் தவிர்ப்பதினால் ஆரோக்கியமான கிளைகளை உருவாக இது உதவுகிறது என விவசாயிகளிடம் எடுத்துரைத்தார்.

    இப்பயிற்சியில் கீழையூர் துணை தோட்டக்கலை அலுவலர்  லோகநாதன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சரவணன், மணிவண்ணன், வைர மூர்த்தி, ஜெகதீஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.


    கீழ்வேளூர் நிருபர் த.கண்ணன்

    No comments