கடையம் ஒன்றியத்தில் எலுமிச்சை சிறப்பு மையத்திற்கு பாதிப்பை ஏற்படும் கல்குவாரிகள் தடை செய்திட கோரிக்கை


கடையம் ஒன்றிய பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரியால் எலுமிச்சை சிறப்பு மையத்திற்கு பாதிப்பு ஏற்படுவதால், அரசு நடவடிக்கை எடுத்து கல்குவாரிகளுக்கு தடை விதித்திட வேண்டும் என உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மயிலவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறையின் சார்பில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் கடையம் ஒன்றியம் செல்ல பிள்ளையார்குளம், தீத்தாராபுரம், ராவுத்தபேரி கிராமங்களுக்கு நடுவில் எலுமிச்சை சிறப்பு மையமானது பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது, அதில் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறையின் சார்பில் எலுமிச்சை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் எலுமிச்சை சாகுபடி, அதன் பராமரிப்பு, மற்றும் எலுமிச்சை சார்ந்த பொருட்களின் விற்பனை, எலுமிச்சை பழங்களை சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான பயிற்சிகள்  இந்த மையத்தில் வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதற்கு அருகில் செயல்பட்டு வரும் கல்குவாரியில்  வைக்கப்படும் சக்தி வாய்ந்த வெடி பொருட்களால் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்பட்டு பயன்படுத்தி வரும் இந்த விவசாய சிறப்பு மைய புது கட்டிடங்களில்  விரிசல்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இங்கு செயல்பட்டு வரும் கல்குவாரி கிரசரில் இருந்து வெளியிடப்படும் கல் துகள்கள் மற்றும் புகைகள் இங்கு வளர்க்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு வரும் செடிகளின் மீது படர்ந்து அவைகள் மிகவும் பாதிப்படைந்துள்ளன.

இதே போல் இதன் சுற்று வட்டார பகுதியில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகளால் பயிரிடப்பட்டு வரும் எலுமிச்சை போன்ற பல்வேறு பயிர்கள் இந்த கல்குவாரியில் இருந்து வெளிவரும் புகை துகள்களால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கிணறுகள், பம்பு செட்டுகள், வீடுகள் இடிந்து விழும் சூழலில் உள்ளது.

எனவே தமிழ்நாடு அரசு உடனே தலையிட்டு இப்பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளுக்கு உடனடியாக தடை விதிக்கும்படி இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.மயிலவன் கோரிக்கை வைத்துள்ளார்.

Post a Comment

0 Comments