சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் சக்திவேல், விவசாயி. இவரை கடந்த 2 மாதத்திற்கு முன்பு ரேஷன் அரிசி கடத்தியபோது சேலம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் அவர் ஜாமீனில் வெளியில் வந்தார். இந்த நிலையில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டால் கண்டு கொள்ளாமல் இருக்க குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கேட்டு உள்ளார்.
அதற்கு ஒவ்வொரு மாதம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கூறி உள்ளனர். அவ்வளவு லஞ்ச பணம் கொடுக்க முடியாது என்று நினைத்த அவர் இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் அறிவுரையின் பேரில், நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ.15 ஆயிரத்தை சக்திவேல், கொண்டலாம்பட்டி பகுதியில் இருந்த ஏட்டு ராஜலட்சுமி (வயது36) என்பவரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ராஜலட்சுமியை கையும், களவுமாக கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது லஞ்சம் வாங்கியதில் இன்ஸ்பெக்டர் ராமராஜன்(50), சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன்(37), ராமகிருஷ்ணன்(38) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அலுவலகத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
0 Comments