சென்னை புழல் செக்ரடேரியட் காலனி பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இரவு 7 மணி அளவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற நபர் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து தனது பைக்கில் தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புழல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் யார் என்பது பற்றி விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் ஹெல்மெட் அணிந்து, முகத்தை துணியால் மறைத்து பைக்கில் வந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற மறுநாள் போலீசார் அதே பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முந்தைய நாள் பாலியல் சீண்டலில் ஈடுபடும்போது எப்படி முகத்தை மூடி இருந்தாரோ அதே போன்று மறுநாளும் அந்த நபர் முகத்தை மூடி பைக்கில் வந்தார். அவரை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது 15 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுவன், தனது தந்தையின் பைக்கில் சுற்றி வந்து இதுபோன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து சிறுவனை போலீசார் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments