இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் சார்பில் நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினப் பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் செயல்படும் மேர யுவ பாரத் துறையினர், ஈரோடு மாவட்டம் ஈங்கூரில் ஒரு தனியார் கல்லூரியுடன் இணைந்து தேசிய ஒற்றுமை தினப் பேரணியை சிறப்பாக நடத்தினர்.
இந்த விழிப்புணர்வுப் பேரணியில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்கள் தேசியக் கொடி மற்றும் ஒற்றுமை குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். பேரணியில் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் விழிப்புணர்வு வாகனம், பாரம்பரிய கரகாட்டம், மாட்டு நடனம், சிலம்பு, மான்கொம்பு போன்ற தமிழகப் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்த 5 கி.மீ தூரப் பேரணியை மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா மற்றும் ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரி கல்லூரி முதல்வர் ரமேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். சென்னிமலை சாலை, கொத்தம்பாளையம் வழியாகச் சென்ற பேரணி மீண்டும் கல்லூரி வளாகத்திலேயே நிறைவடைந்தது.
முன்னதாக, சர்தார் வல்லபாய் படேலின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் ஒற்றுமைக்கான உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டனர். அவர்கள், சர்தார் வல்லபாய் படேலின் எண்ணங்கள், தேச ஒற்றுமைக்கான பண்புகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தல் மற்றும் சுதேசிப் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி உறுதிபூண்டனர். இந்தப் பேரணி, முதலமைச்சரின் 2024ஆம் ஆண்டிற்கான இளைஞர் விருதாளரான N.கதிரவன் ( தலைவர் - அக்னி சிறகுகள் விளையாட்டு மன்றம் ) அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.
செய்திகள் மற்றும் விளம்பரங்கள் வெளியிட தொடர்பு கொள்ளவும்
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.- 9965162471, 6382211592 .







0 Comments