மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் ரோடு சாரதா நகர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். தனியார் கல்லூரி பேராசிரியர். இவர் கடந்த 21-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றவர் மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மர்மநபர்கள் கதவை உடைத்து, உள்ளே புகுந்து வீட்டின் அறையில் வைக்கப்பட்டிருந்த 21 பவுன் நகைகள் அடங்கிய லாக்கரையும், வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இதுதொடர்பாக மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மபாரதி மற்றும் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடிவந்தனர்.போலீசாரின் விசாரணையில் மயிலாடுதுறை நல்லத்துக்குடி சிவன் நகரை சேர்ந்த சண்முகம் என்கிற மணிகண்டன் (வயது42), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பெரியார் நகரைச்சேர்ந்த சதாசிவம் (49) ஆகியோர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர்களிடம் இருந்து 21 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இவர்கள் லாக்கரை பெயர்த்து எடுத்துச் சென்று அதை உடைத்து அருகில் இருந்த ஒரு இடத்தில் உடைத்து தங்க நகைகளை எடுத்து சென்றுள்ளனர். உடைக்கப்பட்ட லாக்கரும், திருட்டு போன ஸ்கூட்டரும் மீட்கப்பட்டன. கொள்ளை வழக்கில் விரைவாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பாராட்டினார்.


0 Comments