திருவள்ளூர்: இளைஞர் கொலை வழக்கில் காதலியின் தாய்மாமன் உட்பட 4 பேர் கைது

 


திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (25). ஒப்பந்த ஊழியரான இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அண்மையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 19-ஆம் தேதி வெளியே சென்ற ரஞ்சித் இரவு வீடு திரும்பாத நிலையில், மறுநாள் (நவ. 20) காலையில் தோட்டக்காடு ஊர் எல்லையில் உள்ள தனியார் நிலத்தில் முட்புதரில், தலை, கை, கால்களில் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார். இந்த அதிர்ச்சிச் சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், ரஞ்சித் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

விசாரணையில், ரஞ்சித் அதே ஊரைச் சேர்ந்த ஆர்த்திகா ஸ்ரீ என்ற பெண்ணைக் காதலித்துவிட்டு, பின்னர் அவரைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், அந்தப் பெண் சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஆர்த்திகா ஸ்ரீயின் உறவினர்கள், ரஞ்சித்தை வெட்டிக் கொன்றது உறுதியானது. இதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆர்த்திகா ஸ்ரீயின் தாய் மாமன் தினேஷ், மற்றும் அவரது கூட்டாளிகளான விஷால், நவீன்ராஜ், விக்னேஷ் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய உதயா என்ற ஒருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments