தவெக தலைவரும் நடிகருமான விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அஜித் பேசியிருக்கிறார். இது தொடர்பாக அஜித் கூறியிருப்பதாவது: -
கரூர் கூட்ட நெரிசலை வைத்து தமிழ்நாட்டில் நிறைய நடந்து விட்டது, கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பு அல்ல, நாம் எல்லோருமே பொறுப்பு. ரசிகர்களின் அளவு கடந்த எல்லையற்ற அன்பு இதுபோன்ற நிகழ்வுகளை உருவாக்குகிறது. கூட்டத்தால் நாம் மிகவும் வெறித்தனமாகி விடுகிறோம். இது முழு சினிமா துறையையும் மோசமாக காட்டுகிறது.இந்த மீடியாவும் படங்களின் முதல் நாள் முதல் ஷோவை ரசிகர்கள் அது செய்தார்கள் இது செய்தார்கள் என பெரிதாக்கி காட்டுகிறது. இது ரசிகர்கள் மனதை மாற்றுகிறது. அன்பு வையுங்கள் போதும். ரசிகர்கள் என் மீது பொழியும் அன்புக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன். ஆனால் அதே அன்பு காரணமாகத்தான் நான் குடும்பத்துடன் வெளியில் செல்வதில்லை. என் மகனை கூட நான் பள்ளிக்கு கொண்டு சென்று விட முடியாத நிலை இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

0 Comments