நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக, கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் முழுவதும் சுமார் 15,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இளம் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழைநீரால் மூழ்கியுள்ளன இவற்றில், குறிப்பாக கோயில்கண்ணாப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழகண்ணாப்பூர், வடமருதூர், பனையூர்,கோயில்கண்ணாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான தாளடி பயிர்கள் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு பெரும் சேதப்பாதிப்பை சந்திக்கும் நிலையில் உள்ளன.
கோயில்கண்ணாப்பூர் பகுதியில் பெரும்பாலும் கோவில் நிலங்களில் குத்தகை முறையில் சாகுபடி செய்து வரும் விவசாயிகள், குறுவை சாகுபடியில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய தாளடி சாகுபடியில் நம்பிக்கை வைத்திருந்த நிலையில், தொடர்ச்சியான கனமழை காரணமாக பல வயல்கள் முழுமையாக நீரில் மூழ்கி காணப்படுகின்றது.
மழைநீர் வெளியேறாமல் தேங்குவதற்கான முக்கியக் காரணம் வடிகால் வசதி இல்லாததோடு, பாண்டவயாற்றில் இருந்து பிரியும் ஏடையாறு வடிகாலும், தும்பை உள்ளிட்ட வடிகால்களும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தூர்வாரப்படாததே என விவசாயிகள் கடும் குற்றச்சாட்டுகள் எழுப்புகின்றனர். இதனால் விளைநிலைகளில் தேங்கிய மழைநீர் வெளியேறுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஏக்கருக்கு சுமார் ரூ.20,000 வரை செலவு செய்து நெற்பயிர்கள் நட்டு வைத்துள்ள விவசாயிகள், நீரில் மூழ்கிய பயிர்களை காப்பாற்றுவது எப்படி? கடனை அடைப்பது எப்படி? என பெரும் கவலையில் உள்ளனர்.
நான்கு நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக மழைநீரில் மூழ்கியிருப்பதால் நெற்பயிர்களின் வேர் பகுதியில் அழுகல் தொடங்கியுள்ளதாகவும், இதனால் முழு விளையும் நஷ்டமடையும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் உடனடியாக வேளாண்துறையினர் நிலவரத்தை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில்கண்ணாப்பூர் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்குவளை நிருபர் த.கண்ணன்




0 Comments