நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்காலத்தூர் கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. கிராமத்தில் பல இடங்களில் தண்ணீர் உவர்ப்புதண்மையாக மாறியதால் குடிப்பதற்கு தண்ணீரில்லாமல் இந்த மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்தின் குடிநீர் ஆதரமாக இருக்கும் பிடாரி கோவில் அருகே அமைந்துள்ள ஆழ் குழாய் நீர் தேக்க தொட்டியின் கான்கிரீட் மூடி சில ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்துள்ளது.
அதை சீர் செய்யாமல் அப்படியே போட்டு வைத்துள்ளனர். மேலும் பச்சை வலை போட்டு மூடி வைத்திருக்கும் அவல நிலை உள்ளது. இதனால் அந்த தொட்டியில் இலை, தழைகள் கொட்டியும், பாம்பு, தவளை, புழு, பூச்சிகளின் வாழ்விடமாக இருக்கிறது. தொட்டி இருக்கும் இடமும் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் தண்ணீர் அசுத்தமாகி சாக்கடை நீர் போல் உள்ளது. இந்த தொட்டி நீரைதான் மோட்டார் மூலமாக நீர்தேக்க தொட்டிகளில் ஏற்றி கிராமம் முழுவதும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த அசுத்த நீரை குடித்து வருவதால் குழந்தைகள் உள்பட அனைவருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்று ஏற்படுவதாக கூறும் அப்பகுதிவாசிகள் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்வதாக புகார் தெரிவிக்கின்றனர். தண்ணீர் முழுவதுமாக விஷமாகுவதற்குள் உடனிடியாக மாவட்ட நிர்வாகம் சம்பந்த அதிகாரிகள் மூலம் இந்த ஆழ்குழாய் நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்து கான்கிரீட் மூடி போட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி



0 Comments