திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று திருமலை தேவஸ்தானத்தின் அவசர அறக்கட்டளை வாரியக் கூட்டம் திருமலை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழுத்தலைவர் பி.ஆர்.நாயுடு ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:-
அடுத்த மாதம் (டிசம்பர்) 30-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 8-ந் தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படும். முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் அறிவுறுத்தலின்படி, இந்த 10 நாட்களும் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
வைகுண்ட துவார தரிசனத்தின் 182 மணி நேரங்களில், இந்த 10 நாட்களில் 164 மணி நேரங்களுக்கு மேல் சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் ஒரு பகுதியாக, டிசம்பர் மாதம் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை, ஒவ்வொரு நாளும் ரூ.15 ஆயிரம் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் ரூ.1,000 ஸ்ரீவதி தரிசன டிக்கெட்டுகள் வழக்கமான நடைமுறையின்படி ஆன்லைனில் வழங்கப்படும்.
நவம்பர் 27-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை பக்தர்களுக்கு தரிசன டோக்கன்களை பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. டிசம்பர் 2-ந் தேதி இ-டிப் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.
அனைவருக்கும் வெளிப்படையான முறையில் சம வாய்ப்பு வழங்குவதற்காக, டோக்கன்கள் வழங்கும் பணி திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் தேவஸ்தான மொபைல் செயலி, வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்ளப்படும்.
திருப்பதி மற்றும் திருமலை உள்ளூர்வாசிகளுக்கு ஜனவரி 6,7,8 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் முன்கூட்டியே முன்பதிவு செய்பவர்களுக்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 5 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும்.
பரகாமணி திருட்டு வழக்கில் குற்றவாளிகள் மீது கிரிமினல் வழக்குகளைத் தாக்கல் செய்யவும் வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமராவதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் நவம்பர் 27-ந் தேதி நடைபெறும் இரண்டாவது பிரகாரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பங்கேற்கிறார்.
இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில் தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள், கூடுதல் செயல் அலுவலர் சி.எச்.வெங்கையா சவுத்ரி, பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0 Comments