நெல்லையை அடுத்த பழைய பேட்டையை சேர்ந்தவர் ஜேம்ஸ்பாண்ட். இவர் குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டை திருடன் ஒருவன் நோட்டமிட்டுள்ளான். பெரிய வீடு, வீட்டை சுற்றி கண்காணிப்பு கேமரா இருப்பதை வைத்து, வீட்டில் நகை, பணம் நிறைய இருக்கும் என்று மணக்கணக்கு போட்டுள்ளான்.
கண்காணிப்பு கேமராவில் மட்டும் சிக்காமல் வீட்டிற்குள் நுழைந்துவிட்டால், இன்றைக்கு கொழுத்த வேட்டைதான் என்று அதற்கான வாய்ப்பை தேடியுள்ளான். முடிவில், வீட்டிற்குள் நுழைய ஒரு வழி கிடைத்துவிட்டது.
அந்த வழியாக லாவகமாக உள்ளே நுழைந்த திருடன், வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து உள்ளே உள்ள லாக்கரில் நகை, பணத்தை தேடியுள்ளான். ஆனால், ஒரு ரூபாய்கூட உள்ளே இல்லை.
"என்னடா இது இவ்வளவு பெரிய வீட்டில் ஒரு ரூபாயை கூட வைக்காமல் சென்றிருக்கிறார்கள். நம்முடைய உழைப்பு எல்லாம் இப்படி வீணாகிவிட்டதே" என்று கவலைப்பட்ட திருடன், வீட்டு உரிமையாளருக்கு கடிதம் ஒன்றை எழுதிவைத்துள்ளான். அதில், "வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்ல, எதுக்கு இத்தனை கேமரா?" என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளான். அதன்பிறகு, அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.
இந்த நிலையில், குடும்பத்தினருடன் வீடு திரும்பிய ஜேம்ஸ்பாண்ட், வீட்டிற்குள் திருடன் வந்து சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருடன் எழுதிவைத்த கடிதத்தையும் பார்த்து திகைத்து போனார்.
உடனே இதுகுறித்து பழையபேட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், திருடனின் கேரேகை பதிவை எடுத்துச் சென்று, திருடனை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருட வந்த இடத்தில் இப்படி ஒரு ரூபாய்கூட இல்லாத விரக்தியில் திருடன் எழுதிவைத்த கடிதம் அப்பகுதியில், வடிவேலு பட காமெடி போல் எள்ளி நகையாடப்பட்டது.


0 Comments