சென்னை புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் அகஸ்டின் ஜோஸ்வா (வயது 33). இவருக்கும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் கடந்த 23-ந்தேதி அன்று திருமணம் நடந்தது. திருமண தகவல் மையம் மூலமாக இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணம் முடிந்து ஆசை கனவுகளுடன் புதுப்பெண் கணவர் வீட்டிற்கு வந்தார். 24-ந்தேதி அன்று முதலிரவு நடந்தது. அறைக்குள் நுழைந்தவுடன் புதுமாப்பிள்ளை அகஸ்டின் ஜோஸ்வா தாம்பத்திய உறவுக்கு துடித்ததாக தெரிகிறது. ஆனால், புதுப்பெண் உறவுக்கு மறுத்துள்ளார். ‘முதல் 2 நாட்கள் இருவரும் மனம் விட்டு பேசுவோம். அதன்பிறகு உறவை தொடங்கலாம்’ என்று தெரிவித்தாராம். ஆனால், அகஸ்டின் ஜோஸ்வா அதற்கு சம்மதிக்கவில்லை. உடனடியாக உறவை தொடங்க வேண்டும் என்று துடியாய் துடித்துள்ளார்.புதுப்பெண் தற்போது உறவு வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தாராம். இதனால், ஆத்திரம் அடைந்த அகஸ்டின் ஜோஸ்வா அறையில் இருந்த சுத்தியலை எடுத்து புதுப்பெண்ணை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. புதுப்பெண்ணின் கைகள், கால்கள் மற்றும் நெற்றியிலும் காயம் ஏற்பட்டது.
முதலிரவு அறைக்குள் கூச்சல் போட்டபடியே புதுப்பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அகஸ்டின் ஜோஸ்வா, புதுப்பெண்ணை அறைக்குள் போட்டு வெளியில் பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். மயக்கமடைந்த புதுப்பெண் இரவு முழுவதும் முதலிரவு அறையிலேயே சிறை வைத்தது போல கிடந்துள்ளார். மறுநாள் காலையில் தான் உறவினர்கள் முதலிரவு அறையை திறந்து பெண்ணை மீட்டுள்ளனர். பின்னர் அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ஜெரீனா பேகம் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் ராஜு ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். புதுமாப்பிள்ளை அகஸ்டின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், நேற்று புதுப்பெண் மீது தாக்குதல் நடத்திய சுத்தியலோடு அகஸ்டின் ஜோஸ்வா வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுப்பெண் போலீசார் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அப்போது அவர் கூறுகையில், “திருமண தகவல் மையம் மூலம் இருதரப்பினரும் பேசித்தான் திருமணம் முடிவு செய்யப்பட்டது. திருமணத்தின் போது அகஸ்டின் ஜோஸ்வா தன்னை பெரிய வசதி படைத்தவன் என்று கூறினார். வரதட்சணையாக நகைகள் எதுவும் வேண்டாம் என்று அவர் தெரிவித்தார். நானும் அவர் நல்ல கணவராக இருப்பார் என்று கழுத்தை நீட்டினேன்.தாலிகட்டி அகஸ்டின் ஜோஸ்வா வீட்டிற்கு வந்தவுடன் தான் அவர் ஏற்கனவே 2 பெண்களோடு தொடர்பில் இருந்தது தெரியவந்தது. திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணிடமும் அவருக்கு ரகசிய உறவு இருந்ததாக கூறினார்கள். ஆனால், அதை பொருட்படுத்தாமல் நான் அவரோடு நல்லபடியாக வாழ வேண்டும் என்றே நினைத்தேன். அவர் என்னிடம் மனம் விட்டு பேசாமல், என்னோடு உறவு வைப்பதிலேயே குறியாக இருந்தார். அது எனக்கு பிடிக்கவில்லை.
திடீரென்று எதிர்பாராத விதமாக என் மீது தாக்குதல் நடத்தினார். நல்ல வேளையாக நான் உயிர் பிழைத்தேன். இனிமேல் அவரோடு வாழமுடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளேன்” என்று அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.



0 Comments