அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 26) சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் மு.அப்பாவுவை நேரில் சந்தித்துத் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.நாளை (நவ. 27) அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், ராஜினாமா செய்ய வந்த செங்கோட்டையனை, அமைச்சர் பி.கே. சேகர்பாபு சபாநாயகர் அறையிலேயே சந்தித்துப் பேசினார்.
ஏற்கெனவே அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த சேகர்பாபு, தற்போது செங்கோட்டையனையும் திமுகவுக்கு இழுக்கப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பியபோதும், யாருடைய கேள்விக்கும் பதிலளிக்காமல் கையெடுத்துக் கும்பிட்டபடி செங்கோட்டையன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதனால், அவர் தவெகவில் இணைவாரா அல்லது திமுகவின் அழைப்பை ஏற்றுக்கொள்வாரா என்ற குழப்பம் அரசியல் வட்டாரத்தில் நீடிக்கிறது. செங்கோட்டையனின் இந்த முக்கிய நகர்வு, தமிழக அரசியலில் அடுத்து வரவிருக்கும் பரபரப்பான மாற்றத்தின் முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.


0 Comments