‘96, மாஸ்டர், கர்ணன்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை கவுரி கிஷனுக்கு அடுத்ததாக ‘அதர்ஸ்’ திரைப்படம் நேற்று வெளியானது. திரைப்பட புரோமோஷன் நிகழ்ச்சி கடந்த 4 ம் தேதி நடைபெற்றது. அப்போது ஹீரோ ஆதித்யா மாதவனிடம், "ஹீரோயினை தூக்கி வைத்து நடனம் ஆடினீர்களே, அது எப்படி இருந்தது, ஹீரோயின் வெயிட்டா இல்லையா?" என்று யூடியூபர் ஒருவர் கேள்வி கேட்டார்.அதற்கு ஹீரோ சமாளிக்கும் வகையில் பதிலளித்தார்.
இது கவுரி கிஷனை வெகுவாக பாதிக்க, மற்றொரு பேட்டியில் இது பற்றி பேசிய கவுரி கிஷன், அநாகரிகமாக அந்த கேள்வியை யூடியூபர் கேட்டதாக தெரிவித்திருந்தார்.பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கவுரி கிஷனிடம் தவறான கேள்வி எழுப்பிய யூடியூப்ருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம், மலையாள நடிகர் சங்கம், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக கவுரி கிஷன், நேரடியாகவோ, மறைமுகமாகவோ உருவக்கேலி செய்வதை ஏற்க முடியாது என்று அறிக்கை வெளியிட்டார்.
நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து அநாகரிக கேள்வி எழுப்பியது தொடர்பாக வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக யூடியூபர் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தனது கேள்வியால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் நடிகை கவுரி கிஷனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அந்த வீடியோவைப் பகிர்ந்த கவுரி கிஷன், “பொறுப்புணர்வில்லாத மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல. முக்கியமாக, கவுரி கேள்வியைத் தவறாகப் புரிந்துகொண்டாள்; அது ஜாலியான கேள்விதான்," அல்லது அதைவிட மோசமாக, "நான் யாரையும் உடல் ரீதியாக அவமதிக்கவில்லை" எனச் சொல்லி தட்டிக்கழிப்பதும் மிகப்பெரிய பிரச்னைதான். நான் தெளிவாகச் சொல்கிறேன். மேடைத்தனத்துடன் கூடிய போலி வார்த்தைகளால் வெளிப்படும் மன்னிப்பை நான் ஏற்கமாட்டேன். சரியாக நடந்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

0 Comments