திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு தி.மு.க அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் இடையே மாநிலத் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். "கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும், கடந்த 12 ஆண்டுகளாகப் பணி இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணை 149-யை (மீண்டும் ஒரு நியமனத் தேர்வு எழுதும் முறை), அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் 'இருள் சூழ்ந்த அரசாணை' என்று விமர்சித்தார்.
மேலும், "தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் இந்த நியமனத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் எனத் தர்மபுரியில் வைத்து எங்களுக்கு வாக்குறுதி அளித்தார். அதை நம்பி கடந்த தேர்தலில் தி.மு.க வெற்றிக்காகப் பாடுபட்டோம். ஆனால், ஆட்சிக்கு வந்து 99 போராட்டங்களை நடத்தியும், கல்வி அமைச்சரை 60 முறை சந்தித்தும் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை" என அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மற்றும் 'உங்களுடன் ஸ்டாலின்' ஆகிய முகாம்களில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அளித்தும், இதுவரை ஒரு சிறு பதில் கூட வரவில்லை என்றும், வாழ்வாதாரத்தை இழந்து தெருவில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்கத்தினர், வரும் தை மாதம் 1-ம் தேதிக்குள் தமிழக அரசு எங்களது கோரிக்கையை ஏற்று நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும். அவ்வாறு அறிவிப்பு வெளியானால், மீண்டும் தி.மு.க ஆட்சி அமையத் தீவிரமாகப் பணியாற்றுவோம். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் எங்களது விரல்களாலேயே திமுகவிற்கு பொங்கல் வைத்து (தோற்கடித்து) ஆட்சியை விட்டு வீட்டிற்கு அனுப்புவோம் என்றெல்லாம் முக்கிய கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

0 Comments