கீழப்பாவூரில் டாக்டர் இம்மானுவேல் ஏற்பாட்டில் நடைபெற்ற 4வது மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமில் 461 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 58 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட கண்ணொளி திட்டம், பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் தொடர்ச்சியாக பாரத் ஸ்கேன்ஸ் நிறுவனர் டாக்டர் இம்மானுவேல், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய 4வது மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம் கீழப்பாவூரில் நடைபெற்றது.
டாக்டர் இம்மானுவேல் தலைமை வகித்து, முகாமினை தொடங்கி வைத்தார். இதில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 401 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 58 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கண் மருத்துவமனை செல்ல போக்குவரத்து வசதி, உணவு, தங்குமிடம், லென்ஸ் மற்றும் நவீன முறையில் அறுவை சிகிச்சை என அனைத்தும் இலவசமாக செய்து தரப்பட்டது. மேலும் பாரத் ஸ்கேன்ஸ் நிறுவனம் சார்பில் 60 பேருக்கு ரத்த அழுத்த பரிசோதனை, இ.சி.ஜி, சர்க்கரை அளவு பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
இம்முகாமில் தெட்சணமாறநாடார்சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், தமிழ் இலக்கிய மன்ற தலைவர் செல்வன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்.அறிவழகன், முன்னாள் துணைத்தலைவர் தங்கச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயராணி கலைச்செல்வன், திரவியகனிகுணரத்தினம், மற்றும் பாலசுப்பிரமணியன், நாராயணசிங்கம், மல்லிகா, தங்கேஸ்வரன், கவுன்சிலர் இசக்கிமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments