கொலம்பியாவில் விமான விபத்து..... 15 பேர் பலி

 



கொலம்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் நிகழ்ந்த சிறிய ரக பயணிகள் விமான விபத்தில், அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொலம்பிய அரசுக்கு சொந்தமான ‘சடேனா’ (Satena) விமான நிறுவனத்திற்குச் சொந்தமான ‘பீச்கிராஃப்ட் 1900’ ரக விமானம் குகுடா நகரிலிருந்து ஒகானா நோக்கிப் புறப்பட்டது. இதில் 13 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 15 பேர் இருந்தனர்.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்னர், வெனிசுலா எல்லைக்கு அருகிலுள்ள நோர்டே டி சாண்டாண்டர் மாகாணத்தின் குராசிகா என்ற மலைப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது.இந்த விபத்தில் கொலம்பியாவின் கீழ் சபை உறுப்பினரும், மனித உரிமைப் போராட்டக்காரருமான டியோஜெனெஸ் குயின்டெரோ (Diogenes Quintero) உயிரிழந்தார். இவர் நாட்டின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்காகக் குரல் கொடுத்து வந்தவர். இவருடன் இவரது குழுவைச் சேர்ந்த நடாலியா அகோஸ்டா மற்றும் வரும் தேர்தலில் போட்டியிடவிருந்த வேட்பாளர் கார்லோஸ் சால்செடோ ஆகியோரும் உயிரிழந்தனர்.

இந்தத் துயரச் சம்பவத்திற்கு கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மற்றும் துணை அதிபர் பிரான்சியா மார்க்வெஸ் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். “மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒரு தலைவரை நாடு இழந்துவிட்டது” என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் மீட்புக் குழுவினர் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த மலைப்பகுதி ‘ELN’ கெரில்லா குழுக்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால் கூடுதல் பாதுகாப்புடன் விசாரணை நடைபெற்று வருகிறது. மோசமான வானிலை அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments