திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் பழவேற்காடு கடற்கரைக்கு வரக்கூடும் என எதிர்பார்ப்பதால் கடலில் குளிக்க சென்றோ அல்லது ஏரியில் குளிக்க சென்றோ ஒரே ஒரு இறப்பு கூட நிகழக் கூடாது எனும் நோக்கில் திருப்பாலைவனம் காவல்துறை சார்பில் பொன்னேரி காவல் உதவி ஆணையர் சங்கர் தலைமையில் "சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு" குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் வரவேற்றார்.
மீன்வளத்துறை,வருவாய்த்துறை,வனத்துறை, தமிழ்நாடு கடலோர காவல் படை, பழவேற்காடு சுற்றுவட்டாரத்தில் உள்ள மீனவ கிராமங்களின் நிர்வாகிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சென்ற ஆண்டு இதேபோல பாதுகாப்பு கருதி நடைபெற்ற கூட்டத்தின் விளைவாக இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் புத்தாண்டு தினத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் பாதுகாப்பான முறையில் சுற்றுலாப் பயணிகள் பழவேற்காட்டிற்கு வந்து சென்றனர் என்பதை குறிப்பிட்டு அனைவரும் காவல்துறைக்கும் மற்ற துறையினற்கும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பழவேற்காட்டிற்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் படகு சவாரியை முற்றிலும் தடை செய்யவும் தடையை மீறி படகு சவாரி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பின்னர் பழவேற்காடு பகுதிக்கு வருகை தந்த ஆவடி காவல் இணை ஆணையர் சிவக்குமார் மீனவர் கிராம நிர்வாகிகளுடன் கலந்துரையாடி சுற்றுலா பயணிகள் அதிகம் கூடக்கூடிய கடற்கரை பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டின் இரண்டாவது மிக உயரமான கலங்கரை விளக்கம் பொங்கல் தின முதல் பார்வையாளர்களின் அனுமதிக்கு விடப்படுவதால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லிப்ட் வசதியை இணை ஆணையர் சிவக்குமார் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில் வட்டாட்சியர் சோமசுந்தரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி,குணசேகரன் வனச்சரகர் பிரபாகரன், வனவர் நரசிம்மன், திருப்பாலைவனம் காவல் உதவி ஆய்வாளர் மனோவாதேவநேச செபஸ்டின், தமிழ்நாடு கடலோர காவல் படை உதவி ஆய்வாளர் சபாபதி,வருவாய் ஆய்வாளர் பிரேம்நாத்,மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



0 Comments