ஆவுடையார்கோயில் நீதிமன்றத்தில் செயற்பட்டு வரும் வட்ட சட்டப்பணிகள் குழுவும், அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமும்,அறந்தாங்கி போக்குவரத்து காவல்துறையும், அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டமும், கல்லூரி சாலை பாதுகாப்பு சங்கமும் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, ஆவுடையார்கோயில் நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவரும், மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய திரு. கே.பூரண ஜெய ஆனந்த அவர்களின் உத்தரவின்படியும், செயலாளர் மாண்புமிகு திரு.ஏ.செல்ல பாண்டியன் அவர்களின் ஆலோசனைப்படியும், அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை அவர்களின் வழிகாட்டுதல்படியும் நடைபெற்ற இப்பேரணிக்கு, ஆவுடையார்கோயில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் செல்வி. சி.டோரத்தி அவர்கள் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார்.
அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.என்.மணிமாறன், அறந்தாங்கி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திருமதி.எஸ்.கவிதா, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ச.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பெற்றது.
ஆவுடையார்கோயில் நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி, ஆவுடையார்கோயிலின் முக்கிய வீதிகளில், கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் கல்லூரி சாலை பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் பலரும் பங்கேற்று,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியும், அவற்றை முழக்கமிட்டும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிறைவாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகப்பில், பிரதிபலிப்பான்களையும் மாணவர்கள் ஒட்டினர்.
ஆவுடையார் கோயில் நீதிமன்ற வழக்கறிஞர்கள், வட்ட சட்டப்பணிகள் குழுவினர்,அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக அதிகாரிகள், அறந்தாங்கி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.
முன்னதாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு. பழனித்துரை அனைவரையும் வரவேற்றார்.நிறைவாக ஆவுடையார் கோயில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் வீ.ராஜசேகர் நன்றி கூறினார். பேரணி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆவுடையார்கோயில் காவல்துறை ஆய்வாளர் வழிகாட்டுதலோடு காவலர்கள் செய்திருந்தனர். ஆவுடையார் கோயில் தன்னார்வ சட்டப் பணியாளர்கள் எஸ்.சத்தியப்பிரியா, விஜய், செல்வி மற்றும் கல்லூரி சாலை பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் பலரும் ஒருங்கிணைத்தனர்.


0 Comments