காதலி விவகாரத்தில் கல்லூரி மாணவரை கொடூர கொலை செய்த நண்பர்கள்

 


வேலூரில் காதல் விவகாரம் காரணமாக கல்லூரி மாணவர் ஒருவரை அவரது நண்பர்களே அடித்துக் கொலை செய்து, சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று தமிழக-ஆந்திர எல்லையில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பத்தியாவரம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரது மகன் டேனி வளனரசு (19), வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. பாதுகாப்பியல் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.இவர் தனது நண்பர்களான கிஷோர் கண்ணன் (19) மற்றும் பார்த்தசாரதி (19) ஆகியோருடன் வேலூர் சாயிநாதபுரத்தில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 1-ஆம் தேதி என்.சி.சி முகாமிற்கு செல்வதற்காக அறைக்கு வந்த டேனி வளனரசு, மர்மமான முறையில் காணாமல் போனார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், பாகாயம் போலீஸார் நடத்திய விசாரணையில் கிஷோர் கண்ணன் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக டேனியை இரும்பு ராடால் தாக்கியும், பெல்டால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.கொலையை மறைப்பதற்காக, உயிரிழந்த டேனியின் உடலுக்கு குளிர்கால ஜாக்கெட் மற்றும் மஃப்ளர் அணிவித்து, போதையில் இருப்பது போல இருசக்கர வாகனத்தின் நடுவில் அமரவைத்து ஆந்திர எல்லையான சித்தப்பாறை மலை அடிவாரத்தில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று டேனியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான பார்த்தசாரதியை கைது செய்ய தனிப்படை போலீஸார் புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.

ஒரே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரை காதலிப்பதில் ஏற்பட்ட மோதல், ஒரு வாரத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டு இந்த கொடூரக் கொலையில் முடிந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் வேலூர் மற்றும் ஆரணி பகுதிகளில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments