ஆவுடையார் கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு உயர் கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பெற்ற திருக்குறள் கலை இலக்கிய அறிவுசார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கும் விழா, கல்லூரித் திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை அவர்கள் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகையையும் பாராட்டுச்சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில், " திருக்குறள் சார்ந்த கலை இலக்கிய போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் என்ற பொதுமறையைத் தந்தவர் திருவள்ளுவர். எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் . உன் எண்ணமும், செயலும் தூய்மையாகவும்,சரியாகவும் இருந்தால், வெற்றி உறுதியாகும். இன்று தேசிய இளைஞர் தினம்.சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான இன்று தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்பெறுகிறது.நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என உலக இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தவர் சுவாமி. கல்வியும் ஒழுக்கமும் உன்னுடைய இரு கண்கள். எனவே நீ இமைப்பொழுதும் படிக்க வேண்டும். படித்தபடி வாழ வேண்டும். திருக்குறளையும், அது நமக்குச் சொல்கிற வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற போட்டிகள் நடத்தப்பெற்று இன்று பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.
இன்றைய இளைஞர்களின் முன் மாதிரியாகப் போற்றப்பெறுபவர் மேனாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களை நீ உன் வெற்றிப்பயணத்தின் அடித்தளமாகக் கொள்ள வேண்டும்.திருக்குறளையும் திருவள்ளுவரையும் வாழ்நாளில் ஒருபோதும் மறக்காதே.அப்படி மறப்பவன் செய்தவனுக்கு ஒப்பாவான்" என்று பேசினார். தமிழ்த்துறைத்தலைவரும்,திருக்குறள் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கா.காளிதாஸ் வரவேற்புரை ஆற்றினார்.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், திருக்குறள் வினாடி வினா போட்டியில், முதலிடம் பெற்ற முதலாம் ஆண்டு தமிழ் மாணவியர் யா.அப்ரின், ச.கார்த்தியாயினி ஆகியோருக்கு ரூபாய் 4,500 பரிசுத்தொகையும், பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன. இரண்டாமிடம் பெற்ற மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஹெச்.முகம்மது சபுர்தீன், எம்.ராகவன் ஆகியோருக்கு ரூபாய் 3,500 பரிசுத்தொகையும் பாராட்டுச்சான்றிதழ்களும், மூன்றாமிடம் பெற்ற முதலாம் ஆண்டு மாணவர்கள் வி.அருண்,கே.தீபக் ஆகியோருக்கு ரூபாய் 2, 500 பரிசுத்தொகையும் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன.
இதேபோல உருவகக் கட்டுரையில் முதலிடம் பெற்ற முதலாம் ஆண்டு தமிழ் மாணவி யா.அப்ரின், இரண்டாமிடம் பெற்ற மூன்றாம் ஆண்டு தமிழ் மாணவி ஐ.எஸ்பானியா தீபஜோதி, மூன்றாமிடம் பெற்ற முதலாம் ஆண்டு தமிழ் மாணவன் வி.அருண் ஆகியோருக்கு தலா ரூபாய் 4500, 3500, 2500 பரிசுத்தொகையும் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன.
திருக்குறள் விவாத மேடை போட்டியில், முதலிடம் பெற்ற மூன்றாம் ஆண்டு தமிழ் மாணவன் ஹெச்.முகம்மது சபுர்தீன், முதலாம் ஆண்டு தமிழ் மாணவி யா.அப்ரின், முதலாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவி நீ.ஸ்ரீநிதி ஆகியோர் அடங்கிய குழுவினருக்கு ரூபாய் 4500 பரிசுத்தொகையும் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன. இரண்டாமிடம் பெற்ற இரண்டாம் ஆண்டு தமிழ் மாணவி க.அபர்ணா, முதலாம் ஆண்டு வரலாறு மாணவி ரா.ஸ்ரீராஜமதி, முதலாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவி ரா.ஸ்ரீதரணி, ஆகியோருக்கு ரூபாய் 3500 பரிசுத்தொகையும் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன.
மூன்றாமிடம் பெற்ற முதலாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவர்கள் ஜெ.திலீப்குமார், ரா.ராகவி, கா.மீனாதர்ஷினி ஆகியோருக்கு ரூபாய் 2500 பரிசுத்தொகையும் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன.தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் ச.கணேஷ்குமார் நன்றி கூறினார். மு.பழனித்துரை தொகுத்து வழங்கினார்.
விழாவில் ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைப்பேராசிரியர்கள் முனைவர் சி. மேனகா, முனைவர் க.செல்வி, திருமதி ரா.ராஜலட்சுமி, முனைவர் மு.முரளி, திருமதி ந.வனிதா, திருமதி மு.மோகனா, திருமதி த.சுபா ஆகியோர் சிறப்பாகச்செய்திருந்தனர்.



0 Comments