அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


 தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.01.2026) திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 21 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள “அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை” திறந்து வைத்து, 10 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.இச்சிறப்புமிக்க திருமண மாளிகையை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளும் வகையிலும், குறிப்பாக திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மங்களபுரம், ஏகாங்கிபுரம், ஆதிசேஷன் நகர், சாஸ்திரி நகர், பிஸ்லின் நகர், ஜோதி நகர், சேமாத்தம்மன் நகர் ஆகிய பகுதி மக்கள் தங்களது இல்லத் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை குறைந்த செலவில், அதிக வசதிமிக்க இம்மண்டபத்தில் மனமகிழ்வுடன் நிறைவாக நடத்திடும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் கொண்ட 30,000 சதுரடி கட்டடப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையில் தரைத்தளத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் மற்றும் சமையலறை கூடமும், முதலாவது தளத்தில் ஒரே சமயத்தில் 175 நபர்கள் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் உணவுக்கூடமும், இரண்டாவது தளத்தில் 570 இருக்கைகளுடன் கூடிய முற்றிலும் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம், மணமகன் மற்றும் மணமகள் அறைகளும், மூன்றாம் தளத்தில் 4 எண்ணிக்கையிலான விருந்தினர் அறைகள், மின்தூக்கி வசதிகள், நவீன கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இத்திருமண மாளிகை கட்டப்பட்டுள்ளது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments