நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரைபறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்..... கல்லூரி மாணவர்கள், ஆர்வலர்கள் பங்கேற்று ஆய்வு......

 


ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு வகைகளை சார்ந்த பறவைகள் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு வலசை வருகின்றன. 

இந்த பறவைகள் குறிப்பிட்ட சில மாதங்கள் தென் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள், குளங்கள், தாமிரபரணி ஆற்றங்கரைகளில் வசித்து குஞ்சுகள் பொறித்து குடும்பமாக தங்களது நாடுகளுக்கு திரும்பிச் செல்கின்றன. 

இதை நெல்லையை சார்ந்த பறவைகள் ஆர்வலர்கள் குழுவாக இணைந்து கடந்த 15 ஆண்டுகளாக எந்தெந்த பறவைகள் எந்தெந்த நாடுகளில் இருந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வலசை வந்திருக்கிறது என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தி ஆய்வு செய்து வருகின்றனர். 

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 16-வது பறவைகள் கணக்கெடுப்பு இன்று நெல்லை நயினார்குளம் பகுதியில் தொடங்கியது. இந்த பணிகளை மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், நெல்லை மாவட்ட அறிவியல் மையம், நெல்லை இயற்கைச் சங்கம், தூத்துக்குடி முத்துநகர் இயற்கைக் கழகம் மற்றும் தென்காசி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இன்று தொடங்கி 25-ந்தேதி வரை நடத்துகின்றன.

இன்று காலை டவுன் நயினார்குளத்தில் தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தலைமையில் ஏராளமான பறவைகள் ஆர்வலர்கள் பங்கேற்று கணக்கெடுப்பினை தொடர்ந்தனர். 

இங்கு நடப்பதை போலவே தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் உள்ள நீர் நிலைகள், குளக்கரைகளில் பறவைகள் ஆர்வலர்கள் வலசை வந்திருக்கக்கூடிய பறவைகளை கணக்கெடுக்க தொடங்கியுள்ளனர். 

இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று குளத்தில் இருக்கக்கூடிய பறவைகளை பைனாக்குலர் மூலம் பார்வையிட்டு குறிப்புகளை எடுத்துக் கொண்டனர். 3 மாவட்டங்களையும் சேர்த்து 200 குளங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.

கடந்தாண்டு 68 குளங்களில் 24 ஆயிரம் பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட நிலையில் அதில் 71 வகை பறவையினங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments