திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே புதுவாயல் பகுதியில் மஹேந்திரா தொழில் பூங்காவில் 2100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2100 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் மிட்சுபிஷி ஏசி மற்றும் கம்ப்ரஷர் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆண்டொன்றுக்கு 3லட்சம் குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) மற்றும் 6.5 லட்சம் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) உற்பத்தி செய்திடும் வகையில் ஆலையை நிறுவியுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக மிட்சுபிஷி குளிர்சாதன உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார். தொழிற்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டு மிட்சுபிஷி நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும், முதலமைச்சரின் தொலை நோக்கு சிந்தனை, தொழில்வளர்ச்சி குறித்த பார்வை காரணமாகவும், கல்வி மீது வைத்த நம்பிக்கையின் காரணமாக தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவிலேயே உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது எனவும், இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே 11.19% என்ற வளர்ச்சியை எட்டியுள்ளது என தெரிவித்தார். ஜப்பான், ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகள் தமிழ்நாட்டு மாணவர்களை வேலைக்கு அமர்த்துகின்றன என்றும், இந்தியாவில் மின் சாதன பொருட்களில் 41% ஏற்றுமதி தமிழ்நாட்டில் இருந்து மேற்கொள்ளப்படுகின்றன என கூறினார்.
40% உள்ளூர் உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்வது போல, படிப்படியாக 75% உள்ளூர் பொருட்களை கொள்முதல் அதிகரித்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டின் சாலைகளில் நடந்து சென்றால் வெளிநாடு என்ற எண்ணம் இல்லாமல் சொந்த நாட்டில் இருப்பது போல ஜப்பானியர்கள் உணரலாம் என கூறினார். தற்போது 600 பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் 2000 பேருக்கு வேலை என்ற முழுமையை விரைவில் ஆலை நிறைவு செய்யும் எனவும் கூறினார். தொழில் வளர்ச்சி காரணமாக தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் என்ற வளர்ச்சியை திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எட்டும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திராவிட நாயகன் ஆட்சியில் மேலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம், ஒரு தொழிற்சாலையாக நிமிர்ந்து நிற்கிறது எனவும், வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள தொழில்துறை மாநாட்டில், எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தொழிற்சாலைகளாக மாறி வருகிறது என்பது குறித்த விளக்கவுரை அளித்திட உள்ளதாக கூறினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே போடப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு 12ஆம் தேதி முழு விளக்கத்தையும் கொடுப்பதாக அமைச்சர் பதில் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதாப் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர். மற்றும் சி.எச் சேகர். திமுக ஒன்றிய செயலாளர்கள் கி.வெ.ஆனந்தகுமார். ராஜா முரளிதரன். பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் மற்றும் கம்பெனி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




0 Comments