உலகளாவிய ஏ ஐ இம்பாக்ட் சமிட் 2026' மாநாட்டில் மௌண்ட் சீயோன் சில்வர் ஜூப்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்க தேர்வு




தொழில்நுட்ப உலகின் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் 'ஏ ஐ இம்பாக்ட் சமிட் 2026' (AI Impact Summit 2026), வரும் பிப்ரவரி - 16, 2026 அன்று புதுடெல்லியில் உள்ள புகழ்பெற்ற பாரத் மண்டபத்தில் தொடங்குகிறது. உலகளாவிய தெற்குப் பகுதியில் (Global South) நடைபெறும் மிகப்பெரிய மற்றும் முதலாவது உலகளாவிய ஏ ஐ மாநாடாக இது ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைக்க உள்ளது.

உலக அரங்கில் தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவகங்கை மாணவர்கள் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில், சிவகங்கை மாவட்டம் தென்கரையில் உள்ள மௌண்ட் சீயோன் சில்வர் ஜூப்ளி பள்ளி மாணவர்கள், இந்த உலகத்தரம் வாய்ந்த மாநாட்டில் தங்களது கண்டுபிடிப்பை காட்சிப்படுத்தத் தேர்வாகியுள்ளனர்.

இந்தக் கண்காட்சிக்காக நாடு முழுவதிலும் இருந்து 3,500 பள்ளிகள் தங்கள் படைப்புகளைச் சமர்ப்பித்தன. அதில் தமிழகத்திலிருந்து இரண்டு பள்ளிகள் மட்டுமே முதல் 50 இடங்களுக்குள் (Top - 50) தேர்வாகின. இதில் தேசிய அளவில் 32-வது இடத்தைப் பிடித்து, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவர்கள்  நகுல் பிரணேஷ்வர், சுபகவின் மற்றும்  ஹரிஷ் ஆகியோர் சாதனை படைத்துள்ளனர். இவர்கள் உருவாக்கிய ஏ ஐ ஆட்டோ பேட்ச் ரோவர் ( செயற்கை நுண்ணறிவு தானியங்கி சாலை பழுது நீக்கும் இயந்திரம் ) "AI AutoPatch Rover" என்ற அதிநவீனத் திட்டம் இந்த மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

மாநாட்டின் சிறப்பம்சங்கள் மற்றும் கால அட்டவணை :

பிப்ரவரி 16 முதல் 20 வரை ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு, கண்டுபிடிப்புகள், அறநெறிகள் மற்றும் கொள்கை உருவாக்கத்திற்கான ஒரு சங்கமமாகத் திகழும்.

 * இந்தியா ஏ ஐ எக்ஸ்போ (பிப் 16): தொடக்க நாளன்று 300-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கண்காட்சி நடைபெறும். மாணவர்களின் கண்டுபிடிப்புகள் பிப்ரவரி 19 அன்று நடைபெறும் அமர்வில் முக்கியத்துவம் பெறும்.

 * முக்கிய விவாதங்கள்: "எதிர்காலக் கல்வி மற்றும் பணிக்கான ஏ ஐ" மற்றும் "உலகளாவிய ஊடகங்களில் பாலின நெறிமுறைகளைக் கண்டறிய ஏ ஐ" போன்ற முக்கியத் தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும்.

 * நோக்கம்: இந்த மாநாடு தேசிய முன்னுரிமைகளை உலகளாவிய ஒத்துழைப்புடன் இணைத்து, #விக்க்ஷித் பாரத் 2047 என்ற இலக்கை நோக்கி நகர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கட்டமைப்பு: சூத்திரங்கள் மற்றும் சக்கரங்கள்

இந்த மாநாடு மூன்று "சூத்திரங்கள்" (தூண்கள்) மற்றும் ஏழு "சக்கரங்களை" (கருப்பொருள்கள்) அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், விவசாயம், கல்வி, நிதி மற்றும் நிர்வாகம் ஆகிய ஐந்து முக்கியத் துறைகளில் ஏ ஐ -ன் தாக்கம் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்படும்.

உலகத் தலைவர்களின் சங்கமம்

35,000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ள இந்த நிகழ்வில், 15-20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பங்கேற்போர்:

 * சுந்தர் பிச்சை (கூகுள்)

 * ஜென்சன் ஹுவாங் (என்விடியா)

 * சாம் ஆல்ட்மேன் (ஒபன்ஏஐ)

 * பில் கேட்ஸ் ( கேட்ஸ் பவுண்டேஷன் )

 * இந்தியத் தலைவர்கள் : முகேஷ் அம்பானி, நந்தன் நிலேகனி மற்றும் என். சந்திரசேகரன்.

இந்த மாநாடு வெறும் கருத்துப் பரிமாற்றத்திற்கான தளம் மட்டுமல்லாமல், எ ஐ  புரட்சியில் இந்தியாவை ஒரு உலகளாவிய தலைவராக நிலைநிறுத்துவதற்கான தீர்க்கமான ஒரு காலடியாகும். இந்த இந்த ஏஐ மாநாட்டில் பங்கேற்க தேர்வான மவுண்ட் சீயோன் சில்வர் ஜூப்ளி பள்ளி மாணவர்களை பள்ளி நிறுவனர் பிளாரன்ஸ் ஜெயபரதன், தாளாளர் முனைவர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் , அறங்காவலர் விவியன் ரேசல் ஜெய்சன் , முதல்வர் அர்சியா பாத்திமா  மற்றும் வழிகாட்டி ஆசிரியர்கள்  என அனைவரும் வாழ்த்தி பாராட்டினர்.

Post a Comment

0 Comments