நாகை எட்டுக்குடியில் தைப்பூச விழா..... பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்


தைப்பூசம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு, முருகனின் ஆதிபடை வீடாக போற்றப்படும் நாகை மாவட்டம், திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் வெள்ளம்போல் குவிந்தனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

இத்திருக்கோயிலில் நடைபெறும் வழிபாடுகளில் தைப்பூச விழா மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இதனை முன்னிட்டு, வள்ளி–தெய்வானையுடன் முருகப்பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் பரிசட்டத்தில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மூலவரான முருகப்பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டு, விபூதிக்காப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தைப்பூச தினத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டதுடன், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பால் குடங்களை சுமந்தபடியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ள தெப்ப உற்சவத்தையொட்டி, தற்போது முதலே ஏராளமான பக்தர்கள் எட்டுக்குடியில் குவிந்துள்ளதால், ஊர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள் தெரியும் அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் இருந்து சிறப்பு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசந்தர், துணை காவல் கண்காணிப்பாளர் பா. நிக்ஸன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் செங்குட்டுவன், புவனேஸ்வரி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், பொதுச் சுகாதாரத் துறை சார்பில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் செந்தில்குமார், ரகுநாதன், வட்டார மருத்துவ அலுவலர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள் அருளானந்தம், குணசீலன் ஆகியோர் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினரால் கோயில் வளாகத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில், கோயில் செயல் அலுவலர் சீனிவாசன், கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருக்குவளை நிருபர் த.கண்ணன் 





Post a Comment

0 Comments