நாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடியில் அமைந்துள்ள வேதநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் சம்வத்ஸராபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் இரவு நடைபெற்றது.இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயில் கும்பாபிஷேக விழா இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு,திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.இந்த விழாவை முன்னிட்டு,சம்வத்ஸராபிஷேகம் விநாயகர் பூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து,மூலவரான ஸ்ரீ வேதபுரீஸ்வரருக்கும்,அம்பாள் ஸ்ரீ வேதநாயகிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.இதனைத் தொடர்ந்து,திருக்கல்யாண உற்சவத்திற்காக,சாட்டியக்குடி படித்துறை செல்வ விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசை பொருட்கள்,மேளதாளங்கள் முழங்க,ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
பின்னர்,சிறப்பு மலர் அலங்காரத்துடன் ரிஷப வாகனத்தில்,சுவாமி மற்றும் அம்பாள் திருக்கோயில் வளாகத்தில் எழுந்தருளினர்.இதனைத் தொடர்ந்து,மாலைமாற்றுதல், கங்கணம் கட்டுதல் உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகள் நடைபெற்ற பின்,மாங்கல்ய தாரணம் என்று சொல்லக்கூடிய திருக்கல்யாண வைபோகம்,பக்தர்களின் “ஓம் நமசிவாய” முழக்கத்துடன் நடைபெற்றது.பின்னர்,சிறப்பு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு,பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து,சுவாமி புறப்பாடு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று,சுவாமி அம்பாளின் திருக்கல்யாண தரிசனம் பெற்றனர்.
திருக்குவளை நிருபர் த.கண்ணன்


0 Comments