திருக்குவளை,பிப்.10 திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட காலமாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், உறுப்புக் கல்லூரி பேராசிரியர்கள் நியாயமான கோரிக்கைகள் மற்றும் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய சேவைச் சலுகைகளை தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனை கண்டித்து திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சங்கத்தின் செயலாளர் எஸ்.எழிலரசி தலைமையில் பேராசிரியர்கள் கருப்பு பேஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் உறுப்புக் கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் இதுவரை எந்த பதவி உயர்வும் இல்லாமல் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது.
உறுப்பு கல்லூரி ஆசிரியர்களின் நீண்டகால நிலுவை பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும். 2009 முதல் நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்றும், சென்னை வளாகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே ஒரே மாதிரியான, சீரான நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும்.
மேலும், 2025 ஜனவரி முதல் நிலுவையில் உள்ள வருடாந்திர ஊதிய உயர்வுகள், பி.எச்.டி மற்றும் முதுநிலை பட்டங்களுக்கு உரிய சம்பள உயர்வுகள், நியமனத்திற்குப் பிறகு முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கான ஊதிய திருத்தங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் சிபிஎஸ் தொகைகள் மாற்றப்பட வேண்டும், ஓய்வூதிய சலுகைகள் ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அதேபோல், பதவிக்காலம் முடிந்த அல்லது நீண்ட காலமாக தொடரும் முதல்வர் மற்றும் துறைத் தலைவர் பதவிகளில் சுழற்சி முறை அமல்படுத்த வேண்டும் என்றும், உறுப்பு கல்லூரிகள் மீது தொடர்ந்து காட்டப்படும் “மாற்றாந்தாய் மனப்பான்மையை” முற்றிலும் நிறுத்தி, பல்கலைக்கழக முடிவெடுப்பில் உறுப்பு கல்லூரிகளுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் ஒரு சிண்டிகேட் உறுப்பினரை நியமிக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

0 Comments