தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது விநியோகத் திட்டத்திற்கு என தனித்துறை உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 10 முதல் 12 ஆம் தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் டி என் சி எஸ் சி எடை தராசும் நியாய விலை கடையில் உள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும்.ஓய்வு பெற்ற நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், அனைத்து நியாய விலை கடைகளுக்கும் எடையாளரை நியமிக்க வேண்டும். தாயுமானவர் திட்டத்தில் உள்ள பிரச்சனைகள் களையப்பட வேண்டும்.
நியாய விலை கடை பணியாளர்களுக்கு நேரடியாக எழுத்தர் பதவி உயர்வு வழங்க வேண்டும். மகளிர் நியாயவிலை கடைகளை அரசே நடத்தி அப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியான 236-யை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட15 அம்சம் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் முகமது ஆரிப், வட்டத் தலைவர் எம்.தியாகராஜன், வட்ட செயலாளர் ஆர். சுரேஷ்குமார் உள்ளிட்ட நியாய விலைக் கடை பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்


0 Comments