முதலியார் சமூகத்திற்கு அரசியல் கட்சிகள் உரிய பிரதிநித்துவம் அளித்திட வேண்டும்..... தமிழக நீதி சங்கம் கோரிக்கை.....


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழக நீதி சங்கத்தின்  பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் முதலியார் சமூக மக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் நிறுவன தலைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு முதலியார் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு உறுதுணையாக இருந்து தேவைகளை நிறைவேற்றி தருவதாக கூறி கருத்துக்களை கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கார்த்திகேயன்,  முதலியார் சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வாழ்ந்து வரும் நிலையில், பொன்னேரி சட்டமன்ற தொகுதியை மறுவரையறை செய்து தனி தொகுதியில் இருந்து பொது தொகுதியாக மாற்றிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக கூறினார்.



 மேலும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்களை அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றார். மேலும் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 2 கோடி மக்கள் தொகையை கொண்ட முதலியார் சமூகத்திற்கு அரசியல் கட்சிகள் அமைச்சரவை, சட்டமன்றம், பாராளுமன்றம், மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் என பொறுப்புகளை வழங்கி உரிய பிரதிநித்துவம் அளித்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு சங்கம் செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், 30 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் 1ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவித்தார். 



இந்தியாவிலேயே முதன் முதலில் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் முத்தையா முதலியார் எனவும், ஆனால் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் தங்களது சமூகத்தை சேர்ந்த மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளதால், 2கோடி மக்களை கொண்ட முதலியார் சமூகத்திற்கு வேலை வாய்ப்பில் 15% இட ஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு அரசை வலியுறுத்த உள்ளதாக கூறினார். நீதிக்கட்சியின் தந்தை பொன்னேரியில் பிறந்த நடேச முதலியாருக்கு பொன்னேரியில் மணி மண்டபம் கட்டிட வேண்டும்  எனவும், அரசு கட்டிடங்களுக்கு நடேச முதலியார் பெயரினை சூட்டிட வேண்டும் என்றார். சென்னை ரிப்பன் மாளிகையை கட்டிய பொறியாளர் லோகநாத முதலியாருக்கு சிலை அமைத்து மணி மண்டபம் கட்டித்தர வேண்டும் என்றார். பல ஆண்டுகளுக்கு முன் இதே சமூகத்தை சேர்ந்த ஒருவர் அரசியலுக்கு வந்த நிலையில் அவர்களுக்கு மக்கள் மத்தியில் தற்போது செல்வாக்கு இல்லை என சாடினார். 26ஆண்டுகள் கழித்து மக்கள் குறைகள் நிவர்த்தி செய்து பாதுகாப்பு அளித்திட உருவான சங்கம் எனவும், அரசியலுக்குள் செல்வதா என பின்னர் முடிவு செய்யப்படும் என்றார். எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு என்பதை செயற்குழு, பொதுக்குழு கூடி தங்களது மாநாட்டில் அறிவிக்க உள்ளதாக கூறினார். பேரறிஞர் அண்ணா அமைச்சரவையில் தங்களது சமூகத்திற்கு 5அமைச்சர்கள் பொறுப்பு வகித்ததாகவும், தற்போதைய அமைச்சரவையில் உரிய பிரதிநித்துவம் அளிக்கப்படவில்லை என சாடினார். அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிட வேண்டும் எனவும், அமைச்சரவையிலும், துணை முதலமைச்சர் பதவியும் வழங்கிட வேண்டும் என கேட்டு கொண்டார். முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் இருமொழிக் கொள்கையை வலுவாக முன் வைத்தவர் என புகழாரம் சூட்டினார். தங்களது சங்கத்தில் விவசாய அணி உருவாக்கி உள்ளதாகவும், மழை வெள்ளம், புழல் போன்ற பேரிடர் காலங்களில் அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்று தர தங்களது சங்கம் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். 



முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் தோல்வியுற்றதால் பொன்னேரியை தனித்தொகுதியாக மாற்றி விட்டதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, தனி நபர் மட்டுமே தனித்தொகுதியாக மாற்ற முடியாது எனவும், மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படும் பணி எனவும், தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து பொன்னேரியை தனி தொகுதியில் இருந்து பொது தொகுதியாக மாற்றிட வேண்டும் என்றார். தங்களது சமூகத்தை சேர்ந்த நித்தியானந்தா பெரிய அளவில் புகழ் பெற்றிருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தொழிலதிபர், திரைப்பட இயக்குனர் எல்லாம் எங்களது சங்கத்தில் உள்ள போது, சாமியார் எங்களது சங்கத்தில் இருக்க கூடாதா எனவும், நித்தியானந்தா தங்களது சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தால் மகிழ்ச்சி தான் எனவும், கைலாசாவில் தமிழக நீதி சங்கத்தின் கிளை திறக்கப்படும் எனவும், வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி நடைபெற உள்ள முதல் மாநாட்டில் நித்தியானந்தா கலந்து கொள்ள பத்திரிக்கை வாயிலாக அழைப்பு கொடுப்பதாகவும் அப்போது கூறினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய கார்த்திகேயன் தங்களது சமூகத்தை சேர்ந்த திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா மிக பெரிய ஆன்மீகவாதியாக உருவாகி ஆசிரமத்தை நிறுவியதாகவும், சூழ்ச்சி செய்து அவரை அவமானப்படுத்தி தவறாக முத்திரை குத்தி இந்தியாவை விட்டு வெளியேற்றி விட்டதாக கூறினார். ஆனாலும் அசராமல் தனக்காக ஒரு நாட்டையே உருவாக்கியவர் முதலியார் சமூகத்தை சேர்ந்த நித்தியானந்தா எனவும், சங்கராச்சாரியார், ஜக்கி வாசுதேவ் போன்றோருக்கும் பிரச்சினைகள் உள்ளதாகவும், நமது சமூகத்தை சேர்ந்த நித்தியானந்தாவுக்கு பிரச்சினை வரும் போது நாம் குரல் கொடுத்திட வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர்.செ. பாபு மாநில கௌரவ ஆலோசகர் எம் ப பரந்தாமன் மாநில தலைவர் செய்தி தொடர்பாளர் பொன்னுதுரை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் கே தியாகராஜன். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எல் நந்தகுமார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஜெயம் ரமேஷ் இலுப்பாக்கம் ரவி சுதாகர் ஒப்பந்ததாரர் செந்தில் வெற்றி முன்னாள் கவுன்சிலர் வெற்றி ஒன்றிய கழக செயலாளர் இ ஆர் தமிழ்ச்செல்வன் முத்துக்குமார் முன்னாள் தலைவர்கள் பெருவாயில் ராஜசேகர் பண்பாக்கம் சீனிவாசன் பையூர் கோட்டை வேளாண் மரபினர் துரை முதலியார் கே ஏ எம் தமிழரசன் ஊராட்சி செயலாளர் செந்தில் காட்டாவூர் டேவிட்குமார்  மற்றும் பொன்னேரி தொகுதி கும்மிடிப்பூண்டி தொகுதி அனைத்து வேளாளர் முதலியார் பிள்ளைமார்கள் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments