ரெயிலில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட புர்கா அணிந்த ஆண்

 


மும்பை மத்திய ரெயில்வே வழித்தடத்தில் நேற்று முன்தினம் சி.எஸ்.எம்.டி. நோக்கி அதிவேக மின்சார ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலின் இரண்டாம் வகுப்பு பெண்கள் பெட்டியில், கருப்பு நிற பர்தா (புர்கா) அணிந்த ஒருவர் பயணித்தார். ரெயிலில் கூட்டமாக இருந்ததை பயன்படுத்தி, அந்த நபர் பெண் பயணிகள் மீது உரசுவதும், தவறான முறையில் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபடுவதுமாக இருந்துள்ளார்.அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சக பெண் பயணிகள், அவரிடம் பேச முயன்றனர். அப்போது அவரது குரல் மற்றும் உடல் மொழியை வைத்து அவர் பெண் அல்ல, ஒரு ஆண் என்பது தெரியவந்தது. பெண்களிடம் அநாகரீகமாக நடக்கவே அவர் பர்தா அணிந்து மாறுவேடத்தில் பெண்கள் பெட்டிக்குள் புகுந்தது அம்பலமானது.

இது தெரிந்ததும் ஆத்திரமடைந்த பெண் பயணிகள், அந்த நபர் தப்பிவிடாதபடி சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும், அவரது செயலை தட்டிக்கேட்டதோடு, அதை தங்களது செல்போன்களில் வீடியோவாகவும் பதிவு செய்தனர்.இதற்கிடையே ரெயில் காட்கோபர் நிலையத்தை நெருங்கிய போது வேகம் குறைந்த நேரத்தில், அந்த நபர் திடீரென பெண்களின் பிடியில் இருந்து திமிறிக்கொண்டு ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்தார். தண்டவாளத்தை கடந்து மறுபுறம் இருந்த பிளாட்பாரத்திற்கு ஓடிய அவர், அங்கிருந்து கர்ஜத் நோக்கி சென்ற மற்றொரு மின்சார ரெயிலில் ஏறி தப்பிச்சென்றார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின்பேரில் காட்கோபர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய நபரை முல்லுண்டு நிலையம் வரை போலீசார் தேடியும் அவர் சிக்கவில்லை. தற்போது ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், அந்த மர்மநபரை தீவிர மாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments