அமமுக மாணவியர் அணி செயலாளர் ஜீவிதா நாச்சியார் கட்சியிலிருந்து நீக்கம்..... டிடிவி தினகரன் அறிவிப்பு

 


வரும் சட்டமன்ற தேர்தலில் துரோகியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்டுவேன், அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்கமாட்டேன் என கூறிவந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் திடீரென அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளார்.

 இதனால் அதிருப்தி அடைந்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்க ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.இந்நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அமமுகவில் ஐடி விங் மகளிர் பிரிவு இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து தற்போது மாணவியர் அணி செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த ஜீவிதா நாச்சியார் இதில் கலந்து கொண்டார். 

இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியான நிலையில் அமமுகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்து ஜீவிதா நாச்சியார் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக மாணவியர் அணி செயலாளர் B.ஜீவிதா நாச்சியார், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளார்.இதனையடுத்து அமமுகவின் புதிய மாணவியர் அணி செயலாளராக தனம் அபிநயா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இதுதொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சிவகங்கை மாவட்ட மாணவியர் அணி செயலாளராக இருந்து வந்த தனம் அபிநயா, மாணவியர் அணி செயலாளராக நியமிக்கப்படுகிறார். அவருக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.சமீபகாலமாக சசிகலாவுக்கும் டிடிவி.தினகரனுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அவரை நேர் எதிரே சந்திப்பதை டிடிவி.தினகரன் தவிர்த்து வருகிறார். அண்ணா நினைவு நாள் அன்று மெரினாவில் அஞ்சலி செலுத்த வந்த டிடிவி.தினகரன் சசிகலா வருவதை கண்டதும் அவசர அவசரமாக பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பி சென்றது குறிப்பிடத்தக்கது. சசிகலாவுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடம் கிடையாது எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில் அவரை சந்தித்த அமமுக நிர்வாகியை டிடிவி.தினகரன் நீக்கியது இபிஎஸ்க்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments